ஸ்ரீசித்தியாவில் பிகேஆரே போட்டியிடலாம்- வான் அசிசா

ஸ்ரீ சித்தியா   இடைத்   தேர்தலில்   போட்டியிடும்   வாய்ப்பு  பிகேஆருக்கே  கிடைக்கலாம்   என்கிறார்   டாக்டர்   வான்   அசிசா   வான் இஸ்மாயில்.     அவர்  இப்படிச்   சொல்வதற்குக்   காரணமுண்டு.     காலஞ்சென்ற   அத்தொகுதி    சட்டமன்ற   உறுப்பினர்   ஷஹாருடின்  படாருடின்   பிகேஆர்  கட்சி   உறுப்பினர்.

ஆனாலும்,  அவ்விவகாரம்மீது    பக்கத்தான்  ஹரப்பான்  கூட்டணி   அதிகாரப்பூர்வமாக  இன்னும்   முடிவெடுக்கவில்லை.

“நாங்கள்  இன்னும்  சந்தித்துப்  பேசவில்லை.  ஸ்ரீ சித்தியாவில்   எந்தக்  கட்சி   போட்டியிட்டதோ   அதற்குத்தான்  வாய்ப்பு  கொடுக்கப்படுவது   வழக்கம்”,  என  நேற்றிரவு   சுங்கை  கண்டீஸில்   ஹரப்பான்   செராமா  ஒன்றில்  அவர் கூறினார்.

வியாழக்கிழமை  புற்று  நோயால்  இறந்துபோன   ஷஹாருடின்  14வது   பொதுத்  தேர்தலில்  19,372  வாக்குகள்  பெரும்பான்மையில்   அத்தொகுதியில்  வெற்றி  பெற்றார்.

முதல்  தடவையாக   தேர்தலில்    போட்டியிட்ட    அவர்,   பிஎன்னின்  யூசுப்   எம்.ஹனிப்,  பாஸின்  முகம்மட்  சசாலி  டாவுட்,  சுயேச்சை  வேட்பாளர்   எஸ்.விக்னேஸ்வரன்  ஆகியோரைத்    தோற்கடித்தார்.