இகுவானிமிட்டி உல்லாசப் படகை இந்தோனேசியா மலேசியாவிடம் ஒப்படைக்கும்

 

இவ்வாண்டு தொடக்கத்தில் பாலித் தீவில் பறிமுதல் செய்த யுஎஸ்$250 மில்லியன் மதிப்புள்ள இகுவானிமிட்டி என்ற உல்லாசப்படகை இந்தோனேசியா மலேசியாவிடம் ஒப்படைக்கும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் இன்று அறிவித்தனர்.

இந்த உல்லாசப்படகு மலேசிய அரசு நிதியுடன் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் தொடர்புடையது.

அமெரிக்க நீதித்துறை இலாகா செய்த வின்ணப்பத்தின் அடிப்படையில் இந்தோனேசியா இப்படகை பிடித்து வைத்தது. ஆனால். இந்தோனேசிய நீதிமன்றம் இப்படகு கைப்பற்றப்பட்டது தவறு என்றும் அதை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.

சட்ட உதவி வேண்டும் என்று அமெரிக்க முறையான விண்ணப்பம் செய்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலையில் இந்தோனேசிய போலீஸ் அப்படகை மீண்டும் பறிமுதல் செய்தது. அப்படகு மலேசியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அது கூறிற்று, ஆனால் எப்போது என்று கூறவில்லை.

இந்தோனேசிய மற்றும் மலேசிய நாடுகளின் எல்லையை ஒட்டிய கடல் நீர் பகுதியில் இப்படகு ஒப்படைக்கப்படும் என்று பொருளாதாரம் மற்றும் சிறப்புக் குற்றங்களுக்கு பொறுப்பான துணை அதிகாரி டேனியல் சிலிடோங்கா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தர்.

இப்படகை மலேசியாவிடம் ஒப்படைக்கும்படி பிரதமர் மகாதிர் முகமட் விடுத்த தனிப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒரு வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் கூறியது.

இது சம்பந்தமாக கருத்துக் கூறுமாறு ராய்ட்டர்ஸ் விடுத்திருந்த கோரிக்கைக்கு மகாதிரின் அலுவகம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

பிரதமர் மகாதிர் கடந்த ஜூனில் இந்தோனேசியாவுக்கு அவர் பதவி ஏற்ற பின்னர் முதல் அதிகாரப்பூர்வமான வருகையை மேற்கொண்டிருந்தார்.