சிலாங்கூர் எம்பி பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?

 

எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பாளர் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்வார் என்று வட்டாரத் தகவல் கூறுகிறது.

தொடர்பு கொண்ட போது ஒரு பிகேஆர் வட்டாரம், அமிருடின் ஒரு மந்திரி பெசார், அவர் இப்பதவிக்கு பொறுத்தமானவர். ஆகவே, இன்று மாலை மணி 5 க்கு முன்னதாக அவர் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்வார் என்று கூறிற்று.

அவருடைய உதவியாளர் கருத்துரைக்க மறுத்து விட்டார். ஆனால், மந்திரி பெசாரே அவர் எந்தப் பதவிக்கு போட்டியிருகிறார் என்பதை இன்று பின்னேரத்தில் கட்சித் தலைமையகத்தில் வெளியிடுவார் என்று அவர் கூறினார்.

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அவரது கட்சியில் “முகாம்கள்” இல்லை என்று பல தடவைகளில் கூறியிருந்த போதிலும், துணைத் தலைவர் போட்டியில் களமிறங்கும் ரபிஸி ரம்லி, மத்திய பதவிகளுக்கு போட்டியிடும் அவரது முகாமைச் சேர்ந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அவரது பட்டியலில், உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நால்வர் இருக்கின்றனர்: சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், செலயாங் எம்பி வில்லியம் லியோங் மற்றும் சுங்கை பட்டாணி எம்பி ஜோஹாரி அப்துல்.

அவரது பட்டியலில் பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸாவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் நூருல் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

உதவித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவார்கள் என்று ஊகிக்கப்படும் இதர தலைவர்கள்: அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், துணை அமைச்சர் ஆர். சிவராசா ஆகியவர்களோடு தற்போதைய உதவித் தலைவர்கள் ஷம்சுல் இஸ்கந்தார் முகமட் அகின் மற்றும் தியன் சுவா ஆகியோரும் போட்டியிடுவர்.

ரபிஸியின் பட்டியலில் சேர்க்கப்படாதவர்கள் தற்போதைய துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியின் முகாமில் இருப்பார்கள் என்று பார்வையாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.

ரபிஸிக்கு எதிராகத் தமது பதவியைத் தற்காத்துக் கொள்வாரா அல்லது தலைவர் பதவிக்கு அன்வார் இப்ராகிமுடன் மோதுவாரா என்பதை அஸ்மின் இன்னும் தெரிவிக்கவில்லை.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அஸ்மின், அவரது நியமனப் பத்திரத்தை இன்று அவரது பிரதிநிதி மூலம் தாக்கல் செய்வார்.