அபிவிருத்தி செலவினங்களில் 60 விழுக்காட்டைப் பிரதமர் துறை இலாக்கா சேமிக்கவுள்ளது

நாடாளுமன்றம் | சம்பந்தப்பட்ட துறைகளின் மறுசீரமைப்பிற்கு, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM12.3 பில்லியன் அபிவிருத்தி செலவினத்திலிருந்து RM4.9 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று பிரதமர் துறை இலாகா (ஜேபிஎம்) அறிவித்தது.

அதுமட்டுமின்றி, இயக்க செலவுகள் இரண்டு விழுக்காடு குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசியப் பேராசிரியர்கள் மன்றம், அரசாங்க ஆலோசகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் சேவைகள் நிறுத்தப்பட்டதன் வழி இத்தொகையைச் சேமிக்க முடிந்தது எனவும் அவ்விலாகா கூறியுள்ளது.

“எனினும், பிரதமர் துறை அமைச்சின் மறுசீரமைப்புகள் முடிந்தபின்னரே, இந்த ஆண்டு அரசாங்க ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள சேமிப்பு அல்லது குறைப்புக்களை உறுதிபடுத்த முடியும்,” என பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறினார்.

ஜொகூர் பாரு எம்பி அக்மால் நசீர் எழுப்பியக் கேள்விக்கு லியூ இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கு முன்னர், நஜிப் இரசாக்கின் நிர்வாகம், ஜேபிஎம் மீது அதிக கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

2018-ஆம் ஆண்டிற்கு, 188 பில்லியன் ரிங்கிட்டை நஜிப் அவ்வமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளார். அது மொத்த வரவு செலவு திட்டத்தில் 6.1 விழுக்காடு ஆகும். அதே சமயம், சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடு ஆண்டிற்கு 27 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஆகும்.

முதன்முறையாக, 2010-ல், நஜிப் பதவியேற்ற பின்னர், ஜேபிஎம்-இன் செலவினங்கள் RM10 பில்லியனைத் தாண்டியது. இது 2016-ல் RM 20 பில்லியனை எட்டியுள்ளது. 2010 முதல் 2018 வரை ஜேபிஎம்-கான சராசரி ஒதுக்கீடு RM16.5 பில்லியன் ஆகும்.