இன, சமய வாதங்களை எதிர்த்து வாக்களித்த சுங்கை காண்டிஸ் வாக்காளர்களுக்கு நன்றி, சேவியர்

சிலாங்கூர் சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் ஸவாவி அஹ்மட் புஹ்னியின் வெற்றி பக்காத்தான் ஹராப்பானின் பல இன மலேசியா கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். சிறந்த முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்களுக்கும், இவ்வெற்றிக்கு  உழைத்த அனைத்துக் கட்சி தொண்டர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் கெஅடிலான் (கோத்தா ராஜா) நாடாளுமன்றத் தொகுதியின் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 நாட்டு மக்கள் அம்னோவின் இன, சமய வாதங்களைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர் என்பதற்கு அடையாளமாகச் சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்ற அவர், முன்பு மத்திய அரசான பாரிசான் ஆட்சியில் திட்டமிட்ட புறக்கணிப்பால் பாதிக்கப்பட்ட இத்தொகுதியின் சில முக்கிய மேம்பாடுகளில் குறிப்பாகச் சாலை மற்றும் கால்வாய் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான சேவியர் கூறினார்..

வாக்கு வித்தியாசம் குறுகியதற்கு, வேலை நாளில் தேர்தல் வைத்ததும், வெளியூர்களில்  தொழில் புரியும் வாக்காளர்கள் வருகையின்மையுடன், அம்னோவைத் தனது கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளாத பாஸ் உறுப்பினர்களின் தேர்தல் புறக்கணிப்பும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றார். கடந்த தேர்தலில் பாஸ் மற்றும் பாரிசான் தனித்தனியாகப் பெற்ற மொத்த 7,573 + 11,518= 19,091 வாக்குகளுடன் இம்முறை அக்கூட்டணிக்குக் கிடைத்துள்ள 9,585 ஓட்டுகளை ஒப்பிட்டால் அது கடந்த முறை பெற்றதில் 50 விழிக்காடு ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது..

அதே வேளை, பொதுத்தேர்தலில்  இங்கு வாக்களித்த 84 விழுக்காடு வாக்குகளுடன் இடைத்தேர்தலில் வாக்களித்த 49,4 விழுக்காட்டிலிருந்து பி.கே.ஆரின் ஸவாவி அஹ்மட்டுக்கு கிடைத்த 15,427 வாக்குகளுடன் ஒப்பிட்டால் நாம், முன்பைவிடச் சிறப்பாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது விளங்கும்.

அதே வேளையில், இந்தத் தேர்தல் முடிவு வெளியானவுடன் அம்னோ துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ முகமட் ஹசான்,  ஸ்ரீசெத்தியா சட்டமன்றத் தொகுதியைப்  பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கப் போவதாகக் கூறியிருப்பது, குறுகிய காலத்திற்குள் சிலாங்கூரில்  இன்னொரு தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அம்னோவிற்குக் கிடையாது என்பதை உணர்ந்து நழுவிக்கொள்ளும் ஒரு தந்திரம் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.