பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் தொடர்பில் சிங்கப்பூர் “ உயர் அதிகாரிகள்” சிலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுவதை அக்குடியரசின் போக்குவரத்து அமைச்சு மறுத்தது.
அஸ்மினுக்கும் சிங்கை அதிகாரிகளுக்குமிடையில் எந்தக் கூட்டத்துக்கும் திட்டமிடப்படவில்லை, இதுவரை இரு தரப்பும் சந்தித்துப் பேசியதும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி டுடே ஆன்லைன் இணைய செய்தித் தளம் கூறிற்று.
“2018 ஆகஸ்ட் 6 வரை மலேசிய அரசாங்கம் சிங்கப்பூருக்குத் தேவையான விளக்கங்களைக் கொடுக்கவில்லை, சந்தித்துப் பேசுவதற்கான தேதிகளையும் குறிப்பிடவில்லை”, என அப்பேச்சாளர் தெரிவித்ததாக அச்செய்தித் தளம் கூறியது.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அஸ்மின், சிங்கையில் சிகிச்சை பெற்றுவரும் உள்துறை அமைச்சர் முகைதின் யாசினைக் காணச் சென்றபோது அந்நாட்டு உயர் அதிகாரிகள் சிலரைச் சந்தித்து எச்எஸ்ஆர் தொடர்பாக பேச்சு நடத்தியதாகவும் பேச்சு “மிகவும் பயனளிப்பதாக” இருந்தது என்றும் கூறினார்.