இன்று பினாங்கு சட்டமன்றத்தில், துணிச்சலான பேச்சுக்குப் பேர்பெற்ற நோர்லெலா அரிப்பின்(பிகேஆர் -பெனாந்தி) மாநில ஆட்சிக்குழு நியமனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பி சர்ச்சை உண்டாக்கினார்.
ஆட்சிக்குழு நியமனங்கள் பிகேஆருக்கும் அமனா, பெர்சத்து ஆகியவற்றுக்கும் நியாயமாக இல்லை என நோர்லெலா கூறினார்.
அதில் பிகேஆர், அமனா, பெர்சத்து ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது டிஏபிக்கு அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் வாதிட்டார்.
40-பேரைக் கொண்ட சட்டமன்றத்தில் டிஏபி 19 இடங்களை வைத்துள்ளது, பிகேஆருக்கு 14 இடங்கள், அமனாவும் பெர்சத்துவும் தலா இரண்டு இடங்களை வைத்துள்ளன.
“பிகேஆர், அமனா, பெர்சத்து மூன்றும் ஒன்று சேர்ந்தால் அவை 18 இடங்களை வைத்திருக்கும்- அது ஒரு டிஏபிபோல் பலம்வாய்ந்த பெரும்பான்மையாக அமையும்”, என்று நோர்லெலா கூறினார்.
மாநில வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவில் அடிக்கடி வெள்ளத்துக்கு இலக்காகும் பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமான இடமளிக்கப்படவில்லை என்றவர் குறைப்பட்டுக் கொண்டார்.
அவ்வேளை செள கொன் இயோ(டிஏபி- தஞ்சோங்) இடையில் புகுந்து நோர்லெலாவை மடக்கினார். பிரதமர் நியமனத்தை அவர் நினைவுபடுத்தினார். பெர்சத்துவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் அக்கட்சியின் டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
“டிஏபியும் அமனா, பெர்சத்து ஆகியவையும் சேர்ந்தால் 23 இடங்களாகும்.
“அது பிகேஆரும் அவ்விரு கட்சிகளும் சேர்வதால் கிடைக்கும் இட எண்ணிக்கையைவிட அதிகமாகும். மேலும், அமனாவும் பெர்சத்துவும் டிஏபியுடன் அணுக்கமாக உள்ளன”, என்று செள சொன்னார்.
நோர்லெலாவின் நியாயப்படி பார்த்தால் பிரதமர் பதவி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை வைத்துள்ள கட்சிக்கு அல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாரவர்.
“பிரதமர் நியமனம் பக்கத்தான் ஹரப்பான் எடுத்த முடிவு. அதை அனைவரும் மதிக்கிறோம்”, என்று செள கூறினார்.