2002-இலிருந்து மலேசியாவில் எதிரக்கட்சிகளுடன் ஒத்துழைத்து வந்திருப்பதாக அமெரிக்காவில் உள்ள அனைத்துலக ரிபப்ளிகன் கழகம் (ஐஆர்ஐ), கூறியிருப்பது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டிய விசயம் என பாஸ் வலியுறுத்துகிறது.
ஐஆர்ஐ கூறுவது உண்மையாக இருக்குமானால் அது நாட்டின் அரசியல் முறையில் அத்துமீறித் தலையிடுவதற்கு ஒப்பாகும் என அக்கட்சி துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
“எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை (பக்கத்தான் ஹரப்பான்) அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
“நாட்டின் அரசியலில் எந்த அளவுக்கு ஐஆர்ஐ சம்பந்தப்பட்டிருந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்”, என துவான் இப்ராகிம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
துவான் இப்ராகிமின் கருத்தை எதிரொலித்த பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான், அக்கழகத்தின் கூற்று குறித்து அரசாங்கம் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
“ஐஆர்ஐ எதிர்க்கட்சிகளுக்கு வியூக, நிதி உதவிகளை வழங்கியதாகக் கூறியுள்ளது. அக்கட்சிகளில் பாஸ் ஒன்றல்ல.
“ஐஆர்ஐ-இடம் உதவி பெற்று கூட்டரசு அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு வந்தவர்கள் அது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
“அக்கூற்றில் உண்மை உண்டா ,இல்லையா என்பதை விளக்க வேண்டும். பொய் என்றால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்”, என்றார்.
இதனிடையே, அரசுசார்பற்ற அமைப்பான பெர்கெராக்கான் மலேசியாகூ தானா ஆயர்கூ , பிஎன் அரசைக் கவிழ்ப்பதற்காக உதவி பெற்றதாகக் கூறப்படும் ஹரப்பான் தலைவர்மீது போலீசார் விசாரணை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு போலீசில் புகார் செய்துள்ளது.
அந்த என்ஜிஓ-வின் தலைவர் ரேக்கி ஜெஸ்ஸி, அச்செயலைத் தேசத் துரோகம் என்று வருணித்து அது மலேசியர்களின் ஜனநாயக உரிமைகளைச் சிறுமைப்படுத்தி விட்டது என்றார்.