அம்னோ அதன் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காப்பது வீண் வேலை என்று கட்சியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
நம்பிக்கை மோசடி, அதிகாரமீறல், பணச் சலவை என ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நஜிப் பெருஞ் சுமையாவார் என்றும் அவரை அம்னோ இனியும் தாங்கிக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
“நாம் பயணத்தைத் தொடர வேண்டும். காத்திருக்க முடியாது. நஜிப்பைத் தற்காப்பதில் நேரத்தை வீணாக்கப் போவதில்லை.
“அம்னோவில் உள்ள நாம் இந்தச் சுமையை இறுதிவரை சுமக்க முடியாது. எதற்கும் ஒரு முடிவு வேண்டும். இனி, எல்லாம் அவரின் பொறுப்பு”, என மலேசியன் இன்சைட்டிடம் அனுவார் கூறினார்.
அம்னோ இனி கட்சியின் மறுநிர்மாணிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அனுவார் எந்த ஒரு தனி மனிதரைவிடவும் கட்சி முக்கியமானது என்றார்.
“நஜிப் ஒரு தனி நபர். தவிர்க்க முடியாதவர் என்று எவருமில்லை. நஜிப் இப்போது கட்சித் தலைவர் அல்ல. என்னைப் பொறுத்தவரை அவர் கட்சி உறுப்பினர், அவ்வளவுதான். மக்கள் அவரை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது வேறு விசயம்.
“தனி ஒருவரைவிட கட்சி முக்கியமானது. நஜிப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். கட்சி இப்போது புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ளது. நாங்கள் புதிய பாதையில் செல்லப் போகிறோம்.
“நஜிப் நீதிமன்றத்தில் வழக்குகளுக்குத் தீர்வு காணும்வரை காத்திருக்கப் போவதில்லை”, என்றார்.
இப்படி காரசாரமாக பேசியுள்ள அனுவார், 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வி அடைவதற்கு முன்னர், 1எம்டிபி தொடர்பில் நஜிப்பை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.