கடந்த 24 மணி நேரத்தில் அம்னோ தலைவர்கள் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்மீது சரமாரியாக தாக்குதல் தொடுத்து வந்துள்ளனர். புதிய தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அதைத் தடுக்க முனைந்தும் முடியவில்லை.
இத்தாக்குதல்களால் நஜிப் மனம் வருந்த மாட்டார் என்று நம்புவதாக ஜாஹிட் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
“தாக்குதல்களைக் கண்டு மனம் தளராமல் நீதிமன்ற வழக்குகளை அமைதியாகவும் திடமாகவும் எதிர்கொள்வார் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.
பாரிசான் நேசனல் மற்றும் அம்னோ தலைவர் பதவியை நஜிப் துறந்து விட்டாலும் அவரை மதிக்க வேண்டும் என்றும் கீழே விழுந்தார் என்பதற்காக போட்டு மிதிக்கக் கூடாது என்றும் ஜாஹிட் நேற்று கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் சுங்கை கண்டிஸ் இடைத் தேர்தலில் நஜிப்பைப் பரப்புரை செய்ய விட்டிருக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜொகாரி அப்துல் கனி, கூறியிருப்பதற்கு எதிர்வினையாக ஜாஹிட் அவ்வாறு கூறினார்.
முன்னாள் பிரதமரின் நீதிமன்ற வழக்குகள் அம்னோவின் பேரைக் கெடுக்கும் என்று ஜொகாரி கூறியிருந்தார்.
இதனிடையே, அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா மேலும் ஒருபடி முன்னே சென்று நஜிப்பை ஒரு “சுமை” என்றும் அச்சுமையை அம்னோ இனியும் சுமந்து கொண்டிருக்க முடியாது என்றும் சாடினார்.