முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கை அம்னோவிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் எனும் சில அம்னோ மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கு ஆதரவு பெருகி வருகிறது.
சமீபத்தில், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக், தனது முகநூல் பதிவில், அம்னோ தலைமை, முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கைக் கட்சியிலிருந்து அகற்ற தைரியமாக முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
“கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய பார்வையில் ஊழல் நிறைந்த கட்சி எனும் எண்ணத்தை மாற்ற, அம்னோ உண்மையிலேயே விரும்பினால், கட்சியின் போராட்ட அர்ப்பணிப்புக்கான அடையாளமாக, நஜிப்பை உறுப்பினர் தகுதியிலிருந்து தைரியமாக வெளியேற்ற வேண்டும்.
“நாட்டிற்கான போராட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தனிநபரின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, மக்கள் நலன்களை ஒரு மிகப்பெரிய தேசிய முன்னுரிமை எனக் கருதும் அம்னோவின் விவேகம் மற்றும் பொறுப்புணர்வு மிக்க செயலை மக்கள் பாராட்டுவார்கள்,” என்று அவர் கூறினார்.
மலாய் பொருளாதாரக் குழுவின் (காபிம்) தலைவரான ரஹீம் கூறுகையில், அம்னோ உறுப்பினர்கள் மற்றும் தலைமை, ஒரு தலைவரின் தவறான நடவடிக்கைக்கு எதிராக தங்கள் வாய்களைத் திறக்க பயப்படுகிறார்கள், பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள் என்றால் அதற்கான பேரழிவை அவர்கள் எதிர்நோக்க வேண்டிவரும் என்றார்.
“இன்னும் பலர் முன்னாள் அம்னோ தலைவரை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், இளைஞர் பருவத்தில் அவருடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்த நான் உட்பட.
“ஆனால், அம்னோ முன்னாள் தலைவரைக் கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து அகற்றுவது பாரிய அரசியல் தியாகம் என்பதை மக்கள் உணர்வர். இது எதிர்காலத்தில் மக்கள் எவ்வித சந்தேகமும் இன்றி, இந்த மாபெரும் கட்சியின் போராட்டங்களை ஆதரிக்க வழிவகுக்கும்,” என்றார் அவர்.