முஜாஹித் : திருநங்கைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிறுத்துவோம்

திருநங்கைகள் ஆர்வலர் நிஷா அய்யூப் உடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, மத விவகார அமைச்சர் முஜாஹித் யூசுப் ரவா, திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்ச செயல்களை நிறுத்த வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

பொது மக்கள், தொடர்ந்து அவர்களைக் குறைத்து அடையாளப்படுத்தினால், மதிப்பீடு செய்தால், இன்னும் மோசமாக… அவர்களை ஒடுக்கினால், நீங்கள் 80 விழுக்காடு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மிகவும் பயங்கரமான புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டுமென அவர் கூறினார்.

“ஆக, நாம் அவர்களுக்கு உதவவில்லை,” எனக் கூறிய அவர், அவர்களை ஒடுக்க வேண்டாமென வலியுறுத்தினார்.

“அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அவர்கள் சாதாரண குடிமக்கள், இங்கு இருக்கும் மற்றவர்களைப் போலவே அவர்களும் பங்களிக்க விரும்புகிறார்கள் – சுகாதாரம், கல்வி, வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களில் சமமான அணுகல் முறைகளைக் கொண்டவர்கள்,” என்று அவர், நேற்றிரவு புத்ராஜெயா கொம்பிளேக்ஸ் இஸ்லாமில் நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார். அவருடன் மத விவகார துணையமைச்சர் ஃபுஷியா சாலே மற்றும் நிஷா இருவரும் இருந்தனர்.

ஓர் அமைச்சர் தன்னை நேரடியாக சந்திப்பது இதுவே முதன்முறை என்று நிஷா கூறினார்.

தான் திருநங்கைகளுக்காக மட்டுமே குரல் கொடுப்பதாகவும், ஓரினச் சேர்க்கையினருக்காக அல்ல என்பதையும் உறுதியாகக் கூறிய முஜாஹித், உடல் தோற்றத்தின் காரணமாக அவர்கள் ஓரங்கட்டப்படுவதாகச் சொன்னார்.

இத்தகைய அழைப்பு இன்னும் அதிகமான மக்களைத் திருநங்கைகளாக்க ஊக்குவிக்குமே எனக் கேட்டதற்கு, அவர்கள் ஏற்கனவே சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும் என விமர்சகர்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

“திருநங்கை என்பது தவிர்க்க முடியாத ஓர் உண்மை… அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவ்வளவுதான்

“திருநங்கைகள் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்கவில்லை, அவர்களைக் காயப்படுத்த வேண்டாம் எனக் கேட்கின்றனர், உங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறார்கள் எனும் ஒரே காரணத்திற்காக, அவர்களை யாரும் காயப்படுத்த வேண்டாம், மலேசியர்களை யாரும் காயப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது, என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, திருநங்கை சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளை விவாதிக்க, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சை அதில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.