குவா மூசாங், கிளாந்தானைச் சேர்ந்த ‘தெமியார்’ பூர்வக்குடி மக்களின் பிரதிநிதிகள், சுமார் 7 மணி நேரம் காத்திருந்த பின்னர், பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
மகாதிர், நேற்று இறுக்கமான கால அட்டவணையினைக் கொண்டிருந்ததாகவும், அமைச்சரவைக்குத் தலைமை தாங்கியப் பிறகுதான் அவர்களைச் சந்திக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்மையில், பூர்வக்குடியினர் பாரம்பரிய நிலம் மற்றும் ‘மூசாங் கிங்’ டுரியான் தோட்ட நிலம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு தீர்வு கொடுக்க வேண்டும் எனக் கோரி ‘தெமியார்’ பூர்வக்குடி மக்களின் பிரதிநிதிகள் நேற்று துன் மகாதீரைச் சந்தித்தனர்.
அதன் பிறகு, நிருபர்களிடம் பேசிய மகாதிர், தனது அலுவலகத்தில் ஐந்து ‘தெமியார்’ பிரதிநிதிகளைச் சந்தித்ததாக கூறினார்.
பிரதமர், அவர்களின் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிப்பதாக கூறியதாகவும்; ஆனால், பாஸ் தலைமையிலான கிளாந்தான் அரசாங்கம் தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்பதை அவர்களுக்கு நினைவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
“கிளாந்தான் அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் இல்லை, நாங்கள் எதையும் செய்யும் முன்னர், பாஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், நாங்கள் சட்டத்திற்கு இணங்க இந்த விஷயத்திற்குத் தீர்வு காண்போம்.
“மத்திய அரசாங்கம் ஒராங் அஸ்லி (குவா மூசாங்) சமூகத்தின் மீது அனுதாபம் கொண்டுள்ளது, எங்களுக்குச் சக்தி இருந்தால், உடனடியாக இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
நேற்று காலை, ஏறக்குறைய 220 ‘தெமியார்’ பூர்வக்குடியினர், தங்கள் உரிமைக்குரிய பூர்வீக நிலங்களை, மர ஆலை மற்றும் தோட்ட முதலாளிகள் சூரையாடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டி, பிரதமர் இதில் தலையிட்டு தங்களுக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் எனக் கோரி புத்ராஜெயாவில் பிரதமரைச் சந்திக்க காத்திருந்தனர்.
‘போஸ் தோஹோய் ’யில், தங்கள் பூர்வீக நிலத்தில் அத்துமீறி நுழைந்த ஒரு டுரியான் தோட்ட முதலாளியைத் தடுக்க, ‘தெமியார்’ பூர்வக்குடியினர் எழுப்பியிருந்த தடைகளை, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, அத்தோட்ட நிறுவனம் உடைத்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.