முன்னாள் எம்ஏசிசி தலைவர்: வைர மோதிர விவகாரம் சுங்கத்துறை அதிகாரிகளின் சேட்டை

2011-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது ஆத்திரம் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளில் சிலர் அவரது பெயரைக் கெடுப்பதற்காகவே ரிம24மில்லியன் பெறுமதியுள்ள வைர மோதிரம் பற்றிய தகவலை வேண்டுமென்றே கசிய விட்டார்களாம்.

இத்தகவலை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் தலைவர் அபு காசிம் முகம்மட் அதே ஆண்டில் ஒரு நிகழ்வில் உரையாற்றியபோது தெரிவித்தாராம். அது இப்போது யுடியுப்பில் வைரலாகி வருகிறது.

அபு காசிம் தம்முரையில், தவறான அதிகாரிகள் சிலர் வைர மோதிரம் நாட்டுக்குள் வந்ததைக் காண்பிக்கும் “Borang Kastam 1” -ஐக் கசிய விட்டு அப்பொருள் நாட்டைவிட்டு வெளியேறியதக் காண்பிக்கும் “Borang Kastam 2” -ஐக் காண்பிக்காமல் மறைத்து விட்டார்கள் என்றார்.

“நாங்கள் பின்னர் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு சுங்கத்துறை படிவங்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே கசிய விடப்பட்டிருந்தது. எம்ஏசிசி சுங்கத்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அனுமதி அளித்தார் என்பதற்காக அவரைப் பழி வாங்குவதற்காக அப்படிச் செய்யப்பட்டது”, என அபு காசிம் கூறினார்.

அப்போது எம்ஏசிசி “ஓபராசி 3பி” என்ற பெயரில் 62 சுங்கத்துறை அதிகாரிகள்மீது விசாரணை நடத்திக் கொண்டிருந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் தொழிற்சங்கத்தின் வழியாக தம்மையும் அப்போதைய சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லையும் சந்தித்து விசாரணையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அபு காசிம் கூறினார்.

அது கைகூடவில்லை என்றதும் அவர்கள் நஜிப்பைச் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அவர் சந்திக்க மறுத்து விட்டார்.

“நான்தான் நஜிப்பிடம் அவர்களைச் சந்திக்க வேண்டாம் என்றேன்”, என்று கூறிய அபு காசிம் அதன் பின்னர்தான் நஜிப்பைப் “பழிவாங்கும் வகையில்” சுங்கத்துறை பாரம் கசிய விடப்பட்டது என்றார்.

“சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பாரத்தைப் படமெடுத்து கசிய விடாதிருந்தால் (வைர மோதிரக் கதை) யாருக்கும் தெரிந்திருக்காது”.

அப்படிப்பட்ட மோதிரத்தைச் சாதாரண கடைகளில் வாங்க முடியாது என்றாரவர்.

“ரிம24,000-த்துக்கு மோதிரம் வாங்குவதாக இருந்தால் போ கொங் போகலாம் அல்லது ஹபிப்புக்குப் போகலாம். ஆனால், நீங்கள் ரிம 24 மில்லியன் மோதிரம் வாங்குவதாக இருந்தால் ஹபிப் உங்களைத் தேடி வரும்”.

அபு காசிமின் கூற்று நஜிப் மனைவி ரோஸ்மா மன்சூரும் அமெரிக்க நகைக்கடை ஜேக்கப் அண்ட் கோ-வும் பார்ப்பதற்காக மட்டுமே அந்த மோதிரம் அனுப்பப்பட்டதாகக் கூறியது உண்மை என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.