இக்குவானிமிடி வேண்டுமா? ஜோ லோ மலேசியா வந்து பெற்றுக்கொள்ளட்டும் -மகாதிர்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஜோ லோ ஆடம்பரக் கப்பலான இக்குவானிமிடி தனக்குத்தான் சொந்தம் என்று நம்பினால் மலேசியாவுக்கு வந்து உரிமை கொண்டாடலாம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

“அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பும் ஒரே மனிதர் லோதான். அவர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இங்கு வந்து அது தனக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்.

“மிகவும் விலை மதிப்புள்ளது. அவருக்கு (அதை வாங்க) பணம் எங்கிருந்து வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். பணத் தடத்தைப் பின்தொடர்ந்து போனால் இறுதியில் அது 1எம்டிபி- இலிருந்து வந்தது என்பது தெரிய வரும்”, என்றார்.

மகாதிர் இன்று நீதிமன்ற அனுமதியுடன் அக்கப்பலைச் சுற்றி பார்த்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமெரிக்க நீதித் துறை(டிஓஜே) கப்பல் லோவுக்குச் சொந்தமானது என்றும் அது 1எம்டிபி-இலிருந்து ‘கொள்ளையடிக்கப்பட்ட’ பணத்தில் வாங்கப்பட்டது என்றும் கூறியுள்ளதாக மகாதிர் சொன்னார்.

“அவர்கள் (டிஓஜே) மலேசியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட கப்பல் என்பதால் இது நமக்கே உரியது என்கிறார்கள்.

“லோ, இது அவருக்குச் சொந்தமானது என்று நினைத்தால் வந்து பெற்றுக்கொள்ளட்டும்”, என்றாரவர்.