இன்று, 1எம்டிபி ஊழலில் தொடர்புடைய இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைப் பார்வையிட பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சென்றார்.
இன்று காலை சுமார் 11:40 மணியளவில், கிள்ளான் துறைமுகத்திற்கு- RM1 பில்லியன் மதிப்புள்ள அக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் – வந்த அவரை உடனடியாகக் கப்பலுக்குக் கூட்டி சென்றனர்.
அக்கப்பலில் நுழைய, மகாதிருடன், பாதுகாப்பு அமைச்சர் முஹமட் சாபு, துணை அமைச்சர் லியு சின் தோங் மற்றும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் உட்பட 13 பேருக்கு மட்டும் நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஒரு மணி நேரம் கப்பலைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று, இந்தோனேசிய அதிகாரிகள் முதன் முதலாக இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைக் கைப்பற்றினர்.
அதன் பின்னர், அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) மற்றும் அதன் பதிவு உரிமையாளர் இக்குவானிமிட்டி (கேய்மன்) லிமிட்டெட் இடையே, அக்கப்பல் சட்ட ரீதியான விவாதத்திற்குள்ளானது.
இந்த நிறுவனம், இடைத்தரகர்கள் மூலம், வணிகர் லோ தாய்க் ஜோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது.
டிஓஜே மற்றும் இக்குவானிமிட்டி (கேய்மன்) லிமிட்டெட் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தோனேசியா அரசாங்கம், மலேசிய அரசாங்கத்திடம் அக்கப்பலை ஒப்படைக்க, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, பாத்தாம் சுதந்திர வர்த்தக மண்டலத்திற்குக் கொண்டு வந்தது.
அதற்கு மறுநாள், அக்கப்பல் கிள்ளான் துறைமுகத்தை அடைந்தது.