லியோ: தராசு சின்னத்தைக் கைவிடுவது மசீச தனித்து எடுத்த முடிவு

பலாக்கோங் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) சின்னமான தராசைக் கைவிட்டு சொந்த சின்னத்தில் போட்டியிடுவது மசீசவின் சொந்த முடிவாகும்.

அது குறித்து அதன் பங்காளிக் கட்சிகளான அம்னோ, மஇகா ஆகியவற்றுக்குக்கூட இன்னும் தெரிவிக்கவில்லை. எனக் கட்சித் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார்.

“விரைவில் தெரிவிப்போம்”, என்றாரவர்.

14வது பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து கட்சி மேற்கொண்டிருக்கும் சீரமைப்புகளில் தேர்தல்களில் சொந்தச் சின்னத்தையே பயன்படுத்துவது என்பதும் ஒன்று என லியோ கூறினார்.

“இது மசீச அதன் பாதையில் செல்ல விரும்புவதைக் காண்பிக்கிறது.

அம்னோ அண்மையில் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பிஎன் சின்னத்தைப் பயன்படுத்தித் தோல்வி கண்டதுதான் மசீசவின் இம்முடிவுக்குக் காரணம்   என்று  கூறப்பட்டதை   லியோ   மறுத்தார்.

1959க்குப் பின்னர் மசீச தேர்தலில் அதன் சின்னத்தைப் பயன்படுத்திக் கொண்டதில்லை என்பதால் வாக்காளர்கள் அதை அடையாளம் கண்டுக்கொள்வது சிரமமாக இருக்குமே என்பதையும்    லியோ ஏற்கவில்லை. 69 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றி வந்திருப்பதால் கட்சி மிகவும் பிரபலமாக உள்ளது என்றாரவர்.

“அது ஒரு பிரச்னை அல்ல, மசீசவின் போராட்டங்களால் மக்கள் அதன் சின்னத்தை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்”, என்றார்.