நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் காக்க, தேசியத் தொழிற்சங்கம் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றுவிக்கப்பட்டது.
ஆனால், பல ஆண்டுகள் துடிப்பின்றி இருந்த தொழிற்சங்கத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றது. அதன் பின்னர் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதற்கான பல தொடர் நடவடிக்கைகளில் அது இறங்கியதாகவும், அதற்காக பேராக் மாநில மற்றும் தேசியத் தொழிற்சங்கப் பதிவு இலாக்காவிலும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் திருமதி தில்லையம்மாள் ஈப்போவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் தெரிவித்தார்.
அண்மையில், இரண்டாம் முறையாக நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் ஈப்போ, தைப்பிங், கம்பார், பத்துகாஜா மற்றும் பல இடங்களிலிருந்தும் பல துப்புரவுத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகளாக, நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆறு மாதம், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட குத்தகை ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தப்படுவதால்; சம்பள உயர்வு, மருத்துவ விடுமுறை, ஆண்டு விடுமுறை மற்றும் ஆண்டு போனஸ் பல அடிப்படை சலுகைகளையும் உரிமைகளையும் இழந்து வருவதாக தொழிற்சங்கத்தின் தலைவர் திரு குமார் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, தேசிய நிலையில் உள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களாக இணைய வேண்டும். நாடு தழுவிய நிலையில், குத்தகை அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுக்காக்கப்படுவதற்கான தருணம் வந்துவிட்டது. தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவதைத் தொழிலாளர் சட்டம் அங்கீகரித்துள்ளதாகவும் அதன் நிர்வாகச் செயலாளர் மு.சரஸ்வதி தெளிவுபடுத்தினர்.
இது தொடர்பாக, கடந்த மாதத்தில் தேசியத் தொழிற்சங்கப் பதிவு இலாகாவுடன், முத்தரப்பு சந்திப்பொன்று புத்ராஜெயா அலுவலகத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாகக் குழுவினர், குத்தகை மற்றும் முதன்மை நிர்வாக ஏஜெண்டுகள் கலந்துகொண்ட அச்சந்திப்பில், தொழிற்சங்க அங்கீகாரம் பெறுவதற்கான வழிவகைகள் கலந்தாலோசிக்கப்பட்டன என்றும் சரஸ்வதி தெரிவித்தார்.
தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான இரகசிய வாக்கெடுப்பு, இம்மாதம் 24-ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 29-ம் தேதி வரை பேராக், பெர்லிஸ், பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் என தொழிற்சங்கத்தின் தொழில் உறவு அதிகாரியான திரு ஆர்.அர்ஜுனன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கூட்டத்தில், தொழிற்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குணசேகரன், தொழிலாளர்களின் உரிமை மற்றும் தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றியும் விளக்கினார் எனப் பொதுச்செயலாளர் திருமதி தில்லையம்மாள் தனது பத்திரிக்கை செய்தியில் கூறினார்.
இது ஒரு தேசியத் தொழிற்சங்கம் என்பதால், கட்டம்கட்டமாக மற்ற மாநிலங்களிலும் இது மாதிரியான இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை நிர்வாகக் குழு இத்தருணத்தில் மற்ற மாநிலத் தொழிலாளர்களுக்கு அறிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு தொடர்பான மேல் விவரங்களுக்கு, 016- 5587144 , 019 5456462 என்ற எண்களுக்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் குத்தகைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.