ஜிஎஸ்டி வழி வரவுசெய்யப்பட்டு மீண்டும் அதை செலுத்திய மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய ரிம 1,900 கோடி (ரிம 19 பில்லியன்) பணத்தை கஜானாவில் காணவில்லை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுயுள்ளார்.
இது சார்பாக இதற்கு முன்பு பதில் அளித்துள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அவர்கள், அந்தப்பணம் எங்கும் போகவில்லை அது அரசாங்கத்தின் கணக்கில்தான் இிருந்தது. அதை அரசாங்கம் பலவகையான திட்டங்களுக்குப் பயன் படுத்தி இருக்கும். எனவே, இதை நிவர்த்தி செய்யும் பொறுப்பு தற்போதைய நிதி அமைச்சருக்கு உள்ளது என்கிறார்.
மேலும், நஜிப் அவர்கள், அந்தப் பணத்தை புதிய அரசாங்கம் தனது தேவைக்காகப் பயன்படுத்தி இருக்கும் என்று கூறியது, நிதியமைச்சர் லிம் அவர்களை குற்றவாளியாக்கியுள்ளது.
மே மாதம் 21ஆம் தேதி பதவியேற்ற லிம் அவர்கள். இந்த குற்றசாட்டை வன்மையாக மறுத்தார். “மே மாதம் 31 ஆம் தேதி இந்த 1,900 கோடி காணவில்லை, பதவி ஏற்று பத்து நாட்களில் என்னால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவழிக்க இயலும்?”, என்று வினவுகிறார்.
“மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தை சட்டப்படி திருப்பிக் கொடுக்க வேண்டிய நிதி’ என்ற ஒரு கணக்கில் வைத்திருக்க வேண்டும். அதிலிருந்து எடுக்க வேண்டும் என்றால் நிதி அமைச்சர் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.”
“அப்போது நிதி அமைச்சராக இருந்த நஜிப் அவர்கள் இந்த அனுமதியை முறையாக வழங்கியுள்ளாரா?”, என்று வினவுகிறார் லிம்.
உண்மையை அறிய தனது அமைச்சு ஒரு உள்ளாய்வை மேற்கொள்ளும் என்றும், அதோடு ஒரு சுயேட்சையான பொது விசாரணையும் நடத்தப்படும் என்று லிம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதிவரையில் 1எம்டிபி விவாகாரத்தில் காணமல் போன ரிம 5,000 கோடி பணத்தையும், தனது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம், விலையுள்ள அலங்கார நகைகள், 274 விசேச கைப்பைகள் பற்றியும் எந்த வகையிலும் அலட்டிக் கொள்ளாமல், தான் ஒரு நிரபராதி என்று நஜிப் கூறி வருகிறார்.