நாட்டிலுள்ள 365 பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே கல்வி அமைச்சுக்கு நேரடியாக மனுச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர்கள், பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதோடு கீழ்க்காணும் விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
முதலாவது, இதற்குப் பெற்றோர்கள் 100 விழுக்காடு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இரண்டாவது, சம்ப்ந்தப்பட்ட பள்ளிகள் எந்தவிதமானப் பிரச்சனைகளிலும் சிக்கியிருக்கக் கூடாது. மூன்றாவது, அப்பள்ளிகள் அமைந்துள்ள நிலம் கல்வி அமைச்சுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்
கடந்த வியாழக்கிழமை, சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எட்மண்ட் சந்தாதா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வனமான பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 2014 ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 3 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே பந்துவான் மோடலிருந்து பந்துவான் பெனோ பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட மனுச் செய்திருந்ததாகவும் அதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் முழு உதவி பெறும் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறியிருந்தது.
இதனை நிறைவேற்ற அரசாங்கம் குறிப்பாக கல்வி அமைச்சு எத்தகைய நீண்டகாலத் திட்டங்களைக் கொண்டுள்ளது என்று எட்மண்ட் சந்தாரா கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த 31.5. 2018 ஆம் தேதி வரை நாட்டில் 525 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 160 முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் (பந்துவான் பெனோ), எஞ்சிய 365 பள்ளிகள் பகுதி உதவி பெறும் (பந்துவான் மோடல்) பள்ளிகளாகும் என்றார்.
நாடு முழுவதிலுமுள்ள தமிழ்ப்பள்ளிகளில் 388 பள்ளிகளில் பள்ளி வாரியக் குழு உள்ளது. எஞ்சிய 137 பள்ளிகளில் அது இல்லை.
வாரியக்குழு கொண்ட 388 தமிழ்ப்பள்ளிகளில் 100 பள்ளிகள் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாகும். எஞ்சிய 288 பள்ளிகள் பகுதி உதவி பெறும் பள்ளிகளாகும்.
அதேவேளையில், பள்ளி வாரியக்குழு இல்லாத 137 பள்ளிகளில் 59 பள்ளிகள் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாகும்.எஞ்சிய 78 பள்ளிகள் பகுதி உதவி பெறும் பள்ளிகளாகும் என்றார்.
சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில் 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 5 முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகள். எஞ்சிய 7 பள்ளிகள் பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகும் எனவும் அமைச்சர் சொன்னார்.
நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறியிருந்தாலும் இது முழு அளவில் நிறைவேறுவதற்கு பெற்றோர்கள், பள்ளி வாரியக் குழு, பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களின் முழு ஆதரவு இருக்கும் வேளையில் அரசாங்கத்திற்குப் போதிய நிதி வளமும் இருப்பது அவசியமாகும் என்றும் அமைச்சர் சொன்னார்.
-மக்கள் ஓசை, 12.8. 2018.