- நிதிநிலை மேம்படும்வரை சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்வதை அரசாங்கம் ஒத்தி வைத்திருப்பதாக பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் உறுதிப்படுத்தினார்.
“சில கூறுகளை ஆராய்ந்த பிறகு, சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்யும் திட்டத்தை நாட்டின் நிதி நிலவரம் நிலைப்படும்வரை ஒத்திவைப்பதென்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளது”, என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி- நேரத்தின்போது பாரு கூறினார்.
சாலைக் கட்டணங்கள் எங்கு, எப்போது அகற்றப்படும் என்று தெரிந்துகொள்ள விரும்பிய (பிஎன் -ஜெலுபு எம்பி) ஜலாலுடின் அலியாஸுக்குப் பதிலளித்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் டோல் கட்டணத்தை எடுக்க விரும்பினால் அதற்காக ரிம400 பில்லியனைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாரவர்.
நிதிநிலை இடம்தராது என்கிறபோது பக்கத்தான் ஹரப்பான் எதற்காக அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும் என ஜலாலுடின் மீண்டும் வினவியதற்கு வாக்குறுதி அளித்த நேரத்தில் நாட்டின் நிதிநிலை பற்றி அது அறிந்திருக்க வில்லை என்றாரவர்.
“அரசாங்கம் கைக்கு வந்த பிறகுதான் நாட்டின் உண்மையான நிதி நிலவரம் தெரிய வந்தது. அதனால் இபோது மறுபரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று”, என்று பாரு தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.