கிட் சியாங் மகள் செனட்டர்: டிஏபியில் குடும்ப ஆட்சியா என்று அம்னோ தலைவர் சாடல்

டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கின் மகளும் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் சகோதரியுமான பினாங்கு டிஏபி செயலாளர் லிம் ஹுய் இங் செனட்டராக நியமிக்கப்பட்டதை அம்னோ தலைவர் ஒருவர் சாடியுள்ளார்.

இது டிஏபியில் குடும்ப அரசியல் நடப்பதைக் காண்பிக்கிறது என்று இஸ்மாயில் சப்ரி யாக்கூப் கூறினார்.

ஹுய் இங்-குக்கு செனட்டர் ஆகும் தகுதி உண்டா என்றும் இஸ்மாயில் வினவினார்.

“டிஏபியில் ஒரு பகுதியினர் தந்தையும் பிள்ளைகளுமாக மருமகன், மருமகள்களாக , மாமனார், மாமியார்களாக- குடும்ப உறவு உள்ளவர்களாகவே இருப்பார்கள் என்று கூறிவிடலாம்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

டிஏபியில் குடும்ப ஆட்சி நிலவுவதை மறைக்க அம்னோவில் குடும்ப ஆட்சி நடப்பதாக டிஏபி தாக்கிப் பேசுவது வழக்கம் என்று இஸ்மாயில் குற்றஞ்சாட்டினார்.

காலஞ்சென்ற டிஏபி முன்னாள் தேசிய தலைவர் கர்ப்பால் சிங்கின் குடும்பத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரின் மூன்று பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“குறிப்பிட்ட தலைவரின் பிள்ளகள் அல்லர் என்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது சிரமமாக இருந்திருக்கும்”, என்றாரவர்.

மாற்றத்துக்குக் குரல் கொடுக்கும் டிஏபியில் மாற்றமே இல்லை என்றும் இஸ்மாயில் சாடினார்.

“கடந்த காலங்களில் லிம் கிட் சியாங், பிஎன் தலைவர்களுக்கு வயதாகிவிட்டது மற்றவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் விலக வேண்டும் என்பார். அவர் மட்டும் என்னவாம்?

“கிட் சியாங் எந்த மாற்றங்களுக்காகப் போராடினாரோ அந்த மாற்றங்கள் எங்கே? டிஏபியில்தான் குடும்ப ஆட்சி உச்சத்தில் உள்ளது. சிலர் அதை டிஏபி செண்டிரியான் பெர்ஹாட் என்றுகூட கிண்டல் செய்கிறார்கள்”, என்றவர் சொன்னார்.