பிரதமர் பதவி காலத்தை, இரண்டு தவணையாக வரையறுக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம், காரணம் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்கும் வரை, சட்டத் திருத்தங்கள் ஒத்திவைக்கப்படும் என்றார் அவர்.
“அரசியலமைப்பு திருத்தங்கள் எங்களால் உடனடியாக செய்யமுடியாத ஒன்றாகும், ஏனென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இல்லை,” என்றார் அவர்.
“ஆனால், எதிர்க்கட்சியினர் அந்தச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என தெரிந்தால், நாம் அவற்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்,” என இன்று ஊழல் ஒழிப்பு தொடர்பான ஒரு சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
இதுபற்றி, எதிர்க்கட்சியினரிடம் மிக விரைவில் கலந்துபேச உள்ளதாகவும் மகாதிர் தெரிவித்தார்.