முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசியாவின் கடன்களை வைத்து தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களை முறியடிக்கத் தவறியதற்காக வருத்தப்படுகிறார்.
நேற்றிரவு முகநூலில் நஜிப், 2009-இல் தாம் பிரதமராக பொறுப்பேற்றப் போது மலேசியாவும் ஏனைய உலக நாடுகளும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருந்தன என்றும் மலேசியாவின் நிலை 1998 நிதி நெருக்கடியைவிடவும் மோசமாகலாம் என்பது சில பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே நஜிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இரண்டு பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுவந்தார். அவை மலேசியா ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி பெற்றுத் திகழ வழி வகுத்தன. ஆனால், அவற்றால் அரசாங்கக் கடன் பெருமளவு கூடியது.
“அந்த நேரத்தில் என் அரசாங்கத்துக்கு, 1998 பிரதமர்( டாக்டர் மகாதிர் முகம்மட்), 1997 நிதி நெருக்கடியிலிருந்து நாட்டைக் காக்க மேற்கொண்ட முயற்சிகளை அடிக்கடிச் சொல்லிக் காட்டி வந்ததைப்போல் தம்பட்டம் அடித்துக்கொள்ளத் தெரியவில்லை. அதன் காரணமாக , மலேசியர்கள் பெரும்பாலோருக்கு 2008, 2009 பொருளாதார நிலவரங்கள் தெரியாமலேயே போயிற்று.
“அதன் மொத்த விளைவாக, 1998இல் ஏற்பட்டதைவிட மோசமாக இருந்திருக்கக்கூடிய ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாத்தோம் என்ற போதிலும் தேசிய கடன்கள் என்னால்தான் உயர்ந்தன என்ற பழி என்மீது விழுந்தது.
“அந்நேரத்திலும் நான் பிரதமராக இருந்த காலம் முழுவதும் நாட்டையும் பொருளாதாரத்தையும் காக்கவே முன்னுரிமை அளித்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக உண்மை நிகழ்வுகளை மூடிமறைத்து மக்களிடையே தப்பெண்ணத்தைத் தோற்றுவிக்கும் பிரச்சாரங்களை எங்களால் முறியடிக்க முடியாமல் போயிற்று”, என்று நஜிப் தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.