தற்காப்பு அமைச்சர் மாட் சாபுவின் உதவியாளர் அவருடைய திவால் நிலையைத் தீர்ப்பதற்காக பல தரப்பினரிடமிருந்து ரிம800,000-ஐ பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரித்து வருகிறது.
இது குறித்த ஒரு விசாரணை நடத்தப்படுவதை எம்எசிசியின் துணை தலைமை ஆணையர் அஸாம் பாக்கி மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அது பற்றிய முழு விபரங்களைத் தர அவர் மறுத்து விட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்த உதவியாளர் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மே மாதம் கடைசி வரையில் அவரது தகுதியி மாற்றம் ஏதும் இல்லாமலிருந்தது. பின்னர். அவரது கடணைத் தீர்ப்பதற்காக பலரால் பணம் கட்டப்பட்டது. அது குறித்து இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
மாட் சாபு தற்காப்பு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சில நாள்களுக்குப் பின்னர் பணம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று ஒரு வட்டாரம் கூறியது.
இன்னொரு வட்டாரம் அளித்த தகவல்படி, எம்எசிசி அந்த உதவியாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து விட்டது.
இது தவிர, இன்னும் 10 பேர்களிடமிருந்து, பாதுகாப்பு குத்தகையாளர்கள் மற்றும் வணிகர்களின் பிரதிநிதிகள் உட்பட, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.
மலேசியாகினி அமைச்சரையும் அவரது ஊடகச் செயலாளரையும் அவர்களுடைய கருத்துகளுக்காகத் தொடர்பு கொண்டுள்ளது.