14-வது பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பக்காத்தான் ஹராப்பானுக்கு நேரம் போதவில்லை என்பதைப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார்.
எவ்வாறாயினும், அக்கூட்டணி தனது வாக்குறுதியை நிறைவேற்ற மிகச் சிறந்ததைச் செய்ய வேண்டும் அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்குப் பொருத்தமான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கூறினார்.
நேற்று, பெட்டாலிங் ஜெயாவில், ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகாதிர், ஹராப்பான் மற்றும் வாரிசான் சபா கட்சி (வாரிசான்) தலைவர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் டாக்டர் மகாதிர் நினைவுறுத்தியதாக, சில ஆதாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.
“உண்மையில் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை, பல்வேறு வாக்குறுதிகளுடன் ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரித்தோம்… நாம் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நாம் மக்களிடம் வழங்கக்கூடாது.
“வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் தியாகம் செய்ய வேண்டும். அதை நிறைவேற்ற முடியாவிட்டால், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல காரணம் நமக்குத் தேவை.
“இல்லையென்றால், எதிர்க்கட்சியினர் நம்மை விமர்சிக்க அதைப் பயன்படுத்துவர். அடுத்த பொதுத் தேர்தலில் நாம் தோல்வியடைய நேரிடும்,” என அவர் கூறியதாக சில ஆதாரங்கள் மேற்கோளிட்டுக் கூறியுள்ளன.