சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,407 இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அறிவித்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக, நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்கும் இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்குவோம் என்பது பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என டாக்டர் மகாதிர் கூறினார்.
சிவப்பு அடையாள அட்டைப் பிரச்சனைக்கு இதனால் முழுமையான தீர்வு கிடைக்காது எனினும், நீண்ட காலமாக இந்திய சமுதாயம் போராடி வந்த இப்பிரச்சனைக்கு, ஒரு பிரிவினருக்கு இதன்வழி தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து இந்திய நிரந்தர குடியுரிமையாளருக்கும் முழு குடியுரிமை வழங்கப்படுமா எனக் கேட்டதற்கு, “நீல அடையாள அட்டை பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல, தேசியப் பதிவிலாகா சென்று, அதற்கான பாரங்களை அவர்கள் முறைப்படி பூர்த்தி செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
60 வயதுக்குக் கீழ்ப்பட்ட நிரந்தர குடியுரிமையாளர்களும், விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவு செய்தால், அவர்களுக்கும் நீல அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் அவர். அவை :-
- விண்ணப்பத்தாரர் மலேசியாவில் பிறந்திருக்க வேண்டும்
- விண்ணப்பத்தாரரின் தாய் அல்லது தந்தையரில் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும்.
- மலாய் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்
தேசிய மொழித் தேர்வில், சுலபமான கேள்விகளே கேட்கப்படும் என்று அவர் சொன்னார். அடுத்ததாக, பெற்றோர் முறையான திருமண ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தால், குடியுரிமை மறுக்கப்படும் குழந்தைகளின் பிரச்சனையைக் கவனிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று, பக்காத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்களுடன், 14-வது பொதுத் தேர்தலின் போது இந்தியர்களுக்குப் பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி கலந்துபேசியப் பின்னர், இன்று அவர் இந்த அறிவிப்பைச் செய்தார்.
அச்சந்திப்பில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, மனித வள அமைச்சர் எம்.குலசேகரன், பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, நீர், நில, இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார், துணையமைச்சர் ஆர். சிவராசா, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.