சொத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார் ரபிஸி

 

தற்காப்பு அமைச்சர் மாட் சாபுவின் உதவியாளர் ஒருவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரணை மேற்கொண்டிருக்கும் தகவலைத் தொடர்ந்து, பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி சொத்துகளை வெளிப்படையாக அறிவிப்பதின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விசாரணை பக்கத்தான் ஹரப்பானுக்கு தர்மசங்கடமாக இருக்கும் வேளையில், இது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு பாடமாக அமையக்கூடும் என்றாரவர்.

அமைச்சர்கள் அவர்களின் சொத்துகளை எம்எசிசியிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரபிஸி கேட்டுக் கொண்டார்.

மாறாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அவர்களின் சொத்துகளை வெளிப்படையாக அறிவிப்பதைக் கட்டாயக் கடமையாக்கும் சட்டங்களை அரசாங்கம் இயற்ற வேண்டும் என்றார்:

பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களுடைய குடும்பங்களும், மந்திரி பெசார்களும் அவர்களுடைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் உட்பட;

அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள் உட்பட;

அனைத்து மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்;

பிரதமர், துணைப் பிரதமர், அமைச்சர்கள், மந்திரி பெசார்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள்.

இதுதான் சிறந்த முறை என்று கூறிய ரபிஸி, வெளிப்படையாகத் தனது சொத்துகளை அறிவிக்க விரும்பாத அரசியல்வாதி, பொதுத்துறையில் இருக்க அருகதையற்றவர்; அவர் தனியார்துறைக்குத்தான் பொருத்தமானவர் என்றாரவர்.

கடுமையானச் சொத்து அறிவிப்பு சட்டம் தேவைப்படுகிறது என்பதற்கு அமைச்சரின் உதவியாளர் சம்பந்தப்பட்ட மிக அண்மையச் சம்பவம் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று ரபிஸி இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வலியுறுத்துகிறார்.