ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, சிறப்புக் குழு அமைக்கப்பட்டது

ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சு. இராமகிருஷ்ணன் தலைமையில், ஏழு பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்கண்டார் புத்ரி, டத்தோ ஜாபார் கட்டிட கூட்ட அறையில், ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் துணைத் தலைமையாசிரிகளுடன் நடந்த ஒரு சந்திப்புக் கூட்டத்தில், இக்குழுவின் செயலவையினரை இராமகிருஷ்ணன் அறிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த இந்தக் குழு ஆவண செய்யும் என இராமகிருஷ்ணன் மலேசியாஇன்று தொடர்புகொண்ட போது தெரிவித்தார்.

“நான் மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற வகையில், ஜொகூர் மாநிலப் பயனீட்டாளர், மனித வளம் மற்றும் ஒற்றுமை குழுத் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறேன், எனது பணிகள் அதிகம். எனவே, தமிழ்ப்பள்ளி விவகாரங்களைக் கண்காணிக்க – பள்ளிக்குத் தேவையான வசதிகள், மாணவர் மேம்பாடு – இந்தச் சிறப்புக்குழு எனக்கு உதவும்.

“தமிழ்ப்பள்ளிகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கினாலும், அவற்றில் பல பிரச்சனைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆக, அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது,” என பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

சிலாங்கூர் மற்றும் பினாங்கில் இதுபோன்ற சிறப்புக் குழுக்கள் இயங்குவதாகவும் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“இதற்கு முன்னமே, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்த சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில், இதுபோன்ற சிறப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்வழி, தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண முடிகிறது. இனி, ஜொகூரிலும் தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகளை உடனுக்குடன் களைய இக்குழு எனக்கு உதவும்,” என்றார் அவர்.

ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக் குழுவில், டாக்டர் சுப்ரமணியம் Ph.D, பொறியியளாளர் இரமேந்திரன், டாக்டர் சுப்ரமணியம் (இருதய நிபுணர்) , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் இரா.சேதுபதி, ஜொகூர் மாநிலக் கல்வி இலாகாவைச் சேர்ந்த தமிழ்மொழி துணை இயக்குநர் இரா.விஜயன், தமிழ்ப்பள்ளிகள் மேற்பார்வையாளர் சி.பாண்டுரங்கன் மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர் நிர்வாக துணை இயக்குநர் திரு கா.நடராஜா ஆகியோர் உள்ளனர்.