லியு: அமைச்சரின் உதவியாளரைக் குறை சொல்லுமுன்னர் ரபிசி விளக்கம் கேட்டிருக்க வேண்டும்

தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபுவின் உதவியாளர் மீது நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல் விசாரணை தொடர்பில் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி உதவியாளரைக் குறைகூறுவதற்குமுன் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கூறிய தற்காப்புத் துணை அமைச்சர் லியு சின் தொங், தன்னிடம் அல்லது முகம்மட்டின் உதவியாளரிடம் தொலைபேசியில் அழைத்தே விளக்கம் கேட்டிருக்கலாமே என்றார்.

“மாட் சாபுவின் உதவியாளரை ஆறாண்டுகளாக எனக்குத் தெரியும். எங்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருந்து வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை நானறிவேன்.

“அவர் நொடித்துப் போனவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பணி நியமனத்துக்கு முன்னர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கித் (கடன் பாக்கிகளைத்) தீர்த்து விட்டார்”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை எம்ஏசிசி-இடம் விட்டுவிட வேண்டும் என்று லியு கூறினார். அவர்மீது குற்றஞ்சாட்டுவதா வேண்டாமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

“ஆனால், ரபிசி அவரைச் சாடுவது நியாயமல்ல”, என அந்த ஹரப்பான் செனட்டர் கூறினார்.

ரபிசி அவ்விவகாரம் தொடர்பில் அறிக்கை வெளியிடலாம்தானே என்று வினவியதற்கு, கூட்டணியில் உள்ள தலைவர்கள் தங்கள் தோழர்கள் குறித்துக் கருத்துரைப்பதற்குமுன் விசயங்களைத் தெளிவாக கேட்டறிந்துக் கொள்ள வேண்டும் என லியு குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை மலேசியாகினி, அமைச்சர் மாட் சாபுவின் உதவியாளர் அவருடைய நொடிப்பு நிலையை இரத்துச் செய்வதற்குப் பல தரப்பினரிடமிருந்து ரிம800,000-ஐ பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை எம்எசிசி விசாரித்து வருவதாக செய்தி வெளியிட்டிருந்தது.

நேற்று அது குறித்துக் கருத்துரைத்த ரபிசி, அது “ பலதரப்பினரிடம் திரட்டப்பட தொகை” என்று தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால், அது ஏற்கத்தக்கதாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மாறினாலும் கையூட்டுக் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளும் பேர்வழிகள் இன்னும் இருக்கிறார்கள். இவர்களிடம் ஹரப்பான் அரசாங்க உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாரவர்.

“அவர்களுக்குத் தெரியும் எந்த அரசியல்வாதிக்கு அல்லது உதவியாளருக்குப் பணத் தேவை என்பது. பணத்தைக் காட்டும்போது மதிமயங்கக் கூடிய அரசியல்வாதிகளும் உதவியாளர்களும் இருக்கவே செய்வார்கள். அது, அவர்கள் எதிரணியில் இருந்தபோது காணாத ஒன்று”.

அமைச்சர்கள், மந்திரி புசார்கள், ஆட்சிக்குழுவினர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்கள், குடும்பத்தினர் ஆகியோரும் சொத்து விவரங்களை எம்ஏசிசி-இடம் மட்டுமல்லாது வெளிப்படையாகவும் அறிவிக்க வேண்டும் என்று ரபிசி கேட்டுக்கொண்டார்.

அது பற்றிக் கருத்துரைத்த லியு, சொத்து அறிவிப்பு விசயத்தில் தாம் ரபிசியுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார்.