பி.எஸ்.எம். : அரசு நிர்வாக சீரமைப்பு செயற்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்

நாட்டின் நிர்வாக அமைப்புக்களை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், பக்காத்தான் ஹராப்பான் தோற்றுவித்த அரசு நிர்வாக சீரமைப்பு செயற்குழு (ஐ.ஆர்.சி. – Institutional Reforms Committee), கடந்த மாதம் அரசுக்குச் சமர்பித்த பரிந்துரைகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  ஹராப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.

60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள், புதிய ஆட்சி நிர்வாகத்திற்கு ஹராப்பான் கூட்டணியை அமர்த்தினர். ஆட்சியில் அமர்ந்த ஹராப்பான் அரசு, நாட்டின் நிர்வாக அமைப்பு முறைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனும் நோக்கில், சட்ட மற்றும் நிர்வாக நிபுணத்துவம் மிக்க ஐவர் அடங்கிய செயற்குழு ஒன்றினை, கடந்த மே 15-இல் தோற்றுவித்தது. இவர்களில் முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர், டத்தோ அம்பிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 15-ல் அமைக்கப்பட்ட இந்தச் செயற்குழு, ஹராப்பான் ஆட்சியின் நூறு நாட்கள் பூர்த்தியடைவதற்குள், நாட்டின் அமைப்பு முறைகளுக்கான பிரதான மாற்றங்களை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் சமூகக் குழுக்கள் எனப் பல தரப்பட்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர், முழுமையான மறுசீரமைப்பு பரிந்துரைகளை, கடந்த ஜுலை 19-ம் தேதி, அவர்கள் அரசுக்குச் சமர்ப்பித்து விட்டனர்.

இச்செயற்குழு சமர்ப்பித்த பரிந்துரைகள் என்னென்ன, அவை எந்தெந்த துறைகளைச் சார்ந்தவை என்பதனை ஹராப்பான் அரசு மக்களிடம் தெரிவிக்க வேண்டுமென பி.எஸ்.எம். துணைத் தலைவர் மு.சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.

“மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு முன்னர், ஐ.ஆர்.சி. சமர்ப்பித்த பரிந்துரைகள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும், அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இது புதிய அரசாங்கத்தின் பிரதான கடமை என்பதை பி.எஸ்.எம். நினைவுறுத்த விரும்புகிறது,” என்றார் அவர்.

“அதேவேளை, 100 நாட்களில் நிறைவேற்றிட அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், குறிப்பாக, டோல் சாவடி கட்டண வசூலை நிறுத்துதல், மாதச் சம்பளம் ரிம 1500, பி.டி.பி.டி.என் கல்வி கடனுதவியை மீட்டுக்கொள்ளுதல் போன்ற கோரிக்கைகளை, நாட்டின் நிதி நிலவரத்தைக் காரணங்காட்டி நிறைவேற்ற தவறியது ஏற்புடையது அல்ல,” என்றும் அவர் புதிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தினார்.