டாக்டர் எம் : இளைஞர்கள் அதிகாரத்திலிருந்து விலக கஷ்டப்படுகிறார்கள்

இளம் வயதில் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட ஒருவர், நேரம் வரும்போது அந்த அதிகாரத்திலிருந்து தன்னை விடுவிப்பதற்குத் தயக்கம் காட்டுவார் என, இன்று ஓர் இளைஞர் குழுவிடம் பேசும்போது, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.

எந்த பெயரையும் குறிப்பிடாமல், ஓர் இளம் அமைச்சர் என மகாதிர் உதாரணம் கூறினார்.

“மிக இள வயதில் அமைச்சராகிவிட்ட ஒருவர், வயதாகும்போது, அப்பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதில்லை, அதுதான் பிரச்சனை.

“ஒருமுறை அதிகாரம் பெற்றுவிட்டால், அதைவிட்டு போக உங்களுக்குக் கடினமாக இருக்கிறது,” என ‘பெர்டானா லீடர்ஷிப் ஃபெல்லோ’ திட்டத்தில் பங்கேற்ற 60 பேரை, அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கும் விழாவில் மகாதிர் பேசினார்.

இருப்பினும், இன்று காலை, பிரதமர் துறை இலாகாவில் நடந்த அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சதிக் சைட் அப்துல் ரஹ்மானை மகாதிர் பாராட்டினார்.

அந்நிகழ்ச்சியில், துணைப் பிரதமர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், அமைச்சர்கள் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் அலி ஹம்ஸா ஆகியோரும் கலந்துகொண்டார்.