1எம்டிபிக்கு ரிம15 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது, பேங்க் நெகாரா கூறுகிறது

கடன் சுமையிலிருந்த 1எம்டிபிக்கு பேங்க் நெகாரா ரிம15 மில்லியன் அபராதம் விதித்தது. “அபராதம் விதிக்க அனுமதிக்கப்பட்ட போது” பேங்க் நெகாரா அதைச் செய்தது என்று பேங்க் நெகாரா கவர்னர் நோர் ஷம்சியா முகமட் யுனுஸ் கூறினார்.

ஆனால், அது எப்போது நடந்தது என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறவில்லை.

இது வரையில் எம்டிபிக்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நோர் ஷம்சியா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

நிதி சேவைகள் சட்டம் 2013 இன் விதிகளை முழுமையாகப் பின்பற்றத் தவறியதற்காக பேங்க் நெகாரா ஏப்ரல் 28, 2016 இல் 1எம்டிபிக்கு ஒரு நடைமுறை சார்ந்த இணக்கக் கடிதத்தை அனுப்பியது. பேங்க் நெகாராவின் கவர்னர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஸெத்தி அக்தார் அசிஸ் எடுத்துக்கொண்ட இறுதி நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

அக்காலகட்டத்தில், விதிக்கப்பட அபராதத்தை வெளிப்படுத்த மத்திய வங்கிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதை நோர் ஷம்சியா வெளிப்படுத்தினார்.

1எம்டிபி மீதான விசாரணையை மறுபடியும் தொடங்க நாடாளுமன்றம் நேற்று பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, அந்த விசாரணையை மேற்கொள்ளவிருக்கும் சிறப்புப் பணிப்படையின் அனைத்து அமைப்புகளுடனும் பேங்க் நெகாரா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்றாரவர்.

பிரதமர் இலாகா மே 21 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் 1எம்டிபி மீது விசாரணை நடத்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (எஜி) அப்துல் கனி பட்டேல் தலைமையில், இதர மூன்று தலைவர்களுடன், ஒரு சிறப்புப் பணிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.