உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்களா? மறுக்கிறது எம்ஏசிசி

எம்ஏசிசி அதன் பணியாளர்கள், உயர் அதிகாரிகள் உள்பட, இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறும் செய்தியை மறுத்தது.

“அது பொறுப்பற்ற ஒரு செய்தி. சட்டப்பூர்வ ஆதாரத்தையோ நம்பத்தக்க வட்டாரத்தையோ அது மேற்கோள் காட்டவில்லை. பரப்பரப்பை உண்டு பண்ணுவதற்காக அப்படி ஒரு செய்தி பரவலாக்கப்பட்டுள்ளது.

“இச்செய்தி எம்ஏசிசி அதிகாரிகளிடையே ஒரு கலக்கத்தை உண்டு பண்ணும், எம்ஏசிசி-இன் தோற்றத்தையும் அது பாதிக்கலாம். மக்கள் அதன்மீது சந்தேகம் கொள்ளவும் காரணமாக அமையலாம்”, என எம்ஏசிசி இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுவதற்குமுன் அது உண்மைதானா என்பதை ஊடகங்கள் ஆணையத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது சமுதாயத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடும்”, என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.

இன்று உள்ளூர் பத்திரிகை ஒன்றில் எம்ஏசிசி அதிகாரிகளில் பலர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற செய்தி வெளிவந்திருந்தது.