எழுத்தாளர் ஒருவர் 2016-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அப்போதைய இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரையும் டிவிட்டரில் அவமதித்து விட்டார் என்று கூறி போலீஸ் சில மணி நேரம் அவரை விசாரித்துள்ளது.
ஈ.எஸ். சங்கர் என்பார் Murdered in Malaysia: The Altantuya Story என்ற நூலின் ஆசிரியர். 2015-இல் அவர் அந்த நூலை எழுதினார்.
அவர் ஆகஸ்ட் 6-இல் கேஎல்ஐஏ வந்திறங்கிக் குடிநுழைவுத் துறை முகப்புக்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிற்பகல் மணி 3.30-க்கு தடுத்து நிறுத்தப்பட்ட அவரை இரவு 8 மணிக்கு போலீஸ் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த நால்வர் வந்து 11 மணிவரை விசாரணை நடத்தினார்களாம்.
“என்னிடம் வாக்குமூலம் அளிக்குமாறு அவர்கள் கேட்டனர். வாக்குமூலம் அளிக்கவில்லை என்றால் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணைக்காகத் தடுத்து வைக்க வேண்டிவரும் என்றும் கூறினர்”, என நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர் கூறினார்.
முடிவில் போலீஸ் பிணையில் சங்கர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரிடம் அக்டோபர் 8ஆம் தேதி மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலை ஆக வேண்டும் என்றும் கூறப்பட்டதாம்.
அவருடைய நூல் வெளியான நேரம், சங்கர் 2015 செப்டம்பரில் மலேசியாவைவிட்டு வெளியேறினார்.
அன்றிலிருந்து வெளிநாட்டில்தான் வசித்து வந்தார். 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்தான் அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.