சாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பகுதி பெறும் தகுதி உண்டு- ரபிசி

சாபா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி, நேற்று தம் சுற்றுப்பயணத்தின் உச்சக் கட்டமாக அம்மாநிலத்துக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுத்தர பாடுபடப் போவதாகக் கூறினார்.

“மலேசியா உருவாகக் காரணமான மூன்று பிரதேசங்களில் ஒன்று சாபா….சாபாவை 14 மாநிலங்களில் ஒன்றாக கருதக் கூடாது.

“வளங்களைப் பகிர்ந்து கொடுக்கும்போது சாபாவுக்குக் கொடுக்கப்பட வேண்டியது மூன்றில் ஒரு பகுதி, 14-இல் ஒரு பகுதி அல்ல”, என ரபிசி நேற்றிரவு கோத்தா கினபாலுவில் நிதிதிரட்டு விருந்து ஒன்றில் கூறினார்.

அவர் அப்படிக் கூறியதும் விருந்தில் கலந்துகொண்டோர், “ரொம்பச் சரி”, என்று கூவினார்கள்.

சாபாவுக்கும் மேலும் ஒரு துணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஒருவர் கூறியதற்கு ரபிசி பதிலளித்துப் பேசினார்.

பதவி முக்கியமல்ல என்று கூறிய ரபிசி, சாபாவின் தகுதி குறித்து தீவகற்ப மலேசியர் சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்படுவதே முக்கியம் என்றார்.

மலேசியாவை உருவாக்கிய மூன்று பிரதேசங்களில் சாபாவும் ஒன்று என்ற கருத்தைத் தீவகற்ப மலேசியரிடையே பதிய வைப்பதே முக்கியம்.

எட்டாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றதும் மலேசியாவை உருவாக்கிய மூன்று பிரதேசங்களில் ஒன்று என்ற சாபாவின் தகுதியை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துவார் என்றும் ரபிசி கூறினார்.