முன்னாள் சாபா முதல்வர் மூசா அமான், லண்டன், கிளமெண்டைன் சர்ச்சில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சொந்த மாநிலத்துக்குத் திரும்புகிறார்.
மருத்துவர்கள் வேண்டாமென்று ஆலோசனை கூறினாலும் மூசா சாபாவுக்குத் திரும்புவதில் உறுதியாக உள்ளார் என அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜோ விட் கூறினார்.
மூசாவின் சிறப்பு உதவியாளராக இருந்த ஜோ, நான்கு மணி நேரத்துக்கு முன்னதாக முகநூலில் இச்செய்தியைப் பதிவிட்டிருந்தார்.
“மூசா சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துமனையில் தொடர் சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருக்கும்”, என்றும் ஜோ கூறினார்.
சிறிது காலமாக மூசா பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அவர் எங்கும் தப்பி ஓடவில்லை என்றும் இருதய அறுவைக்குப் பின்னர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் என்றும் ஜோ கூறினார்.
“இப்போது அவர் நாடு திரும்பி சட்டமன்ற உறுப்பினராக கடமையாற்றும் நேரம் வந்துவிட்டது”, என்றாரவர்.
ஆகஸ்ட் 15-இல், சாபா சட்டமன்றத் தலைவர் சைட் அபாஸ் சைட் அலி, செப்டம்பர் 11க்குள் மூசா சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும், தவறினால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும் என்று கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.