மகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க வேண்டும்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , பெருமக்கள் மன்றத்தின் (சிஇபி) சேவை, அதிலும் குறிப்பாக அதன் தலைவர் டயிம் சைனுடினின் சேவை போதும் என்று நினைக்கவில்லை.

“இல்லை, இல்லை, இல்லை. அவர் (டயிம்) கூறலாம் 100 நாள் ஆகிவிட்டது என்று. நான் அதன் பணி 100 நாள்களுக்கு மட்டும்தான் என்று நான் கூறியதே இல்லை. அவர் இருக்கத்தான் வேண்டும்”, என்றவர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார்.

நேற்று டயிம், சிஇபி-இன் 100 நாள் பணிக்காலம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததாக ஓர் அறிக்கையில் அறிவித்திருந்தது குறித்து மகாதிர் கருத்துரைத்தார்.

டயிம் திறமையானவர், நிறைய தகவல் அறிந்தவர் அவரது சேவை தம் நிர்வாகத்துக்கு மிகவும் தேவை என்று மகாதிர் கூறினார்.

“நான்கு வாரியங்கள் 1எம்டிபி பற்றியும் மற்றவை பற்றியும் ஆராய்ந்து வருகின்றன. ஆனால், டயிம்தான் எப்படியோ நிறைய தகவல் அறிந்தவராக விளங்குகிறார். அதனால் அவர் பணியைத் தொடர்வது அவசியம் என்று நினைக்கிறேன். அவரை நான் இன்னும் பணிநீக்கம் செய்யவில்லை.

“மேலும், அவருக்கு இதுவரை ஒரு காசு சம்பளமாகக் கொடுத்ததில்லை (ஆனாலும்) ஒரு நாளில் 24 மணி நேரம் வேலை செய்கிறார்.

பெருமக்கள் மன்றத்தின் மற்ற உறுப்பினர்கள் பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸ், பெட்ரோனாஸ் முன்னாள் தலைவர் முகம்மட் ஹசான் மரைக்கான், பொருளாதார வல்லுனர் ஜோமோ குவாமே சுந்தரம், கோடீஸ்வரர் ரோபர்ட் குவாக் ஆகியோராவர்.