மூசா அமான் நாடு திரும்பினார் : போலீஸ், எம்ஏசிசி அறிவித்தது

சபா மாநில முன்னாள் முதலமைச்சர், மூசா அமான் மலேசியா திரும்பினார். இன்று மாலை, சுமார் 6.45 மணியளவில், லண்டனில் இருந்த அவர் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் வந்தடைந்தார்.

குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், முஸ்தாஃபார் அலி, இதனை இன்று ஓர் அறிக்கையின் வழி உறுதிபடுத்தினார்.

செலேதார், சிங்கப்பூரிலிருந்து வந்த மூசா, அவரது பரிவாரங்கள் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் உட்பட அனைவருக்கும் குடியேற்ற விசாரணைகள் நடந்ததாக முஸ்தாஃபார் தெரிவித்தார்.

இருப்பினும், உடல்நிலை சரியில்லாத காரணமாக மூசா குடிநுழைவு துறை சோதனைச் சாவடிக்கு வரவில்லை.

“பயணிகளின் ஆவணங்கள் முறைப்படி சோதனையிடப்பட்டு, குடிநுழைவு துறை இலாகாவின் கணினியில் பதிவு செய்யப்பட்டது,” என முஸ்தாபார் தெரிவித்தார்.

மூசாவின் வருகையை, குடிநுழைவு துறை இலாகா, மலேசிய போலிஸ் படை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) தெரிவித்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

எம்பண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

முன்னதாக இன்று, மூசாவின் முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் ஜொ வித், லண்டன், கிளெமென்ட் செர்சில் மருத்துவமனை நிபுணர்களின் ஆலோசனைக்குச் செவி சாய்க்காமல், மூசா அமான் நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்தார் என பெர்னாமா செய்திகள் கூறின.

இருப்பினும், நாடு திரும்பும் முன்னர், சிங்கப்பூர் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற வேண்டியிருந்தது எனவும் அவர் சொன்னார்.

சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினருமான மூசா, 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், சபா மாநிலத்திற்குப் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த மே 17-ம் தேதி, லண்டனுக்கு ஓடிப் போனார்.

மே 10-ம் திகதி, சபா மாநில யாங் டிபெர்த்துவான் பதவியேற்பு விழாவின் போது முதலமைச்சரை மிரட்டியது தொடர்பில் போலிஸ் அவரைத் தேடிவந்தது மட்டுமின்றி; மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கையூட்டு வழங்கியக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்ஏசிசி-யும் அவரை விசாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.