உங்கள் கருத்து: மகாதிர் சிஇபி வேண்டும் என்கிறாரா அல்லது டயிம் மட்டும் போதும் என்கிறாரா?

டயிம் தொடர்ந்து இருப்பது அவசியம்: மகாதிர் திட்டவட்டம்

ஜஸ்மின்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பெருமக்கள் மன்ற(சிஇபி) தலைவர் டயிம் சைனுடின் ஓர் ஆலோசகராக தொடர வேண்டும் என்று நினைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக சிஇபி உறுப்பினர்கள் அனைவருமே தொடர்ந்து இருப்பதை மகாதிர் விரும்புகிறார் என்று நினைத்துவிடக் கூடாது.

“நிறைய தகவல்கள் தெரிந்தவராக இருக்கிறார்”, என்று ஒரு காரணம் கூறப்பட்டுள்ளது.

எது எப்படியோ, டயிம்மீதும் அவரின் ஆற்றலின்மீதும் மகாதிருக்கு முழு நம்பிக்கை இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அமைச்சர்கள் பெரும்பாலும் புதியவர்களாக இருப்பதால் நம்பிக்கைக்குரிய பழையவர்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமக்கு வலக் கரமாக இருக்கக்கூடிய ஒருவர் தேவை என்று மகாதிர் நினைத்திருக்கலாம். அப்படி ஒருவர் அமைச்சரவையில் இல்லை என்பதால் டயிமை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

அவருடைய தேர்வு அமைச்சரவையுடனும் பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்துடனும் எப்படி ஒத்துப்போகிறது என்பது அடுத்த சில நாள்களில் தெரிந்து விடும்.

சூசாகேஸ்: டயிம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று மகாதிர் விரும்புவதை அடுத்து எனக்குள் எழும் கவலைகள் என்னவென்றால்:

100-நாள் வாக்குறுதிகளில் வேறு என்னென்ன வாக்குறுதிகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும்? “நான் 100 நாள் என்று கூறவில்லையே”, என்று சொல்வது புரியவில்லை. யாரோ, சொன்னார்களா, இல்லையா?
100 நாள்களுக்குப் பிறகு என்ன, 1,000 நாள்களா? 10,000 நாள்களா?
ஒரு குழு அமைக்கப்பட்டால் அதன் பணிக்காலம், அதன் பணிகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அமைச்சரவையின் அங்கீகாரத்தை அது பெற்றிருக்க வேண்டும்.

இல்லையென்றால், அடுத்த தடவை டயிம் சீனாவுக்குச் சென்றாலோ அல்லது வேறு எதுவும் செய்தாலோ பொதுமக்களுக்கும் எதிரணிக்கும் அவர் நிறைய பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

டிஎம்ஜி: மகாதிர் சர்வாதிகாரத்தனமாகவும் ஜனநாயகத்தை மீறியும் நடந்துகொண்டிருப்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஒரு அமைச்சரவை இருக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அமைச்சரவையுடன் அல்லவா நீங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அவருக்கு டயிம் தேவையென்றால், இருப்பதா வேண்டாமா என்பதை டயிம் முடிவு செய்யட்டும். ஆனால், அதில் உள்ள மற்றவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

சிஇபி-க்கு மலேசியாவின் நன்றி. மலேசியா ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடு என்பதை நீங்கள் மதிக்க வேண்டும். உங்கள் நியமனம் ஜனநாயகக் கொள்கைக்கு ஏற்ப இல்லை.

அமைச்சரவை அமைக்கப்படுவதற்குமுன் உங்களை அமைத்தோம். இப்போது அமைச்சரவை இருக்கிறது. நீங்கள் அமைச்சரவையையும் ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும்.

கிம் குவெக்: மகாதிர்- டயிம் கூட்டு, 1997/98 ஆசிய நிதி நெருக்கடியின்போது நாட்டின் நிதிநிலையைப் படுமோசமான நிலைக்கு இட்டுச் சென்ற வேண்டியவர்களுக்குச் சலுகைகாட்டும் அம்னோவின் முதலாளித்துவக் கொள்கையையும் அதனை அடுத்து அன்வார் இப்ராகிம்மீது குதப் புணர்ச்சி வழக்கு தொடுக்கப்பட்டதையும் நினைவுப்படுத்துகிறது.

பின்னவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டதுதான் ‘ரிபோர்மாசி’ இயக்கத்தைத் தோற்றுவித்தது. அது நாட்டில் புத்தாட்சி மலரச் செய்தது.

முக்கிய பொறுப்புகளுக்கு வேண்டப்பட்ட பழையவர்களை நியமிப்பதில் மகாதிர் நாட்டம் காட்டுவதைக் கண்டு கலக்கமடையும் வேளையில், டயிமையே அதிகம் நம்பி இருக்கும் அவருடைய போக்கு அவர் ரிபோர்மாசி இலட்சியங்களை நிறைவேற்றுவாரா என்று கவலையுற வைக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை உடனடியாக நிறைவேற்றாமலிருப்பது கவலையை மேலும் மோசமாக்குகிறது.

ரிபோர்மாசி ஆட்சியில் கூட்டுத் தலைமைத்துவம்தான் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அவ்வாக்குறுதிக்கு இன்னும் உரு கொடுக்கப்படவில்லை, டயிம் மீண்டும் அதிகாரப் பொறுப்புக்கு வந்திருப்பது ஹரப்பான் ரிபோர்மாசி பாதையில் இன்னும் பயணிக்கத் தொடங்கவில்லை என்பதற்கு அசைக்கமுடியாத ஓரு சான்று.

டேவிட் தாஸ்: பிரதமர் மகாதிருக்கு 93 வயதாகி விட்டது. இது சவால்கள் மிகுந்த காலம். அமைச்சரவையோ அனுபவமற்றது. சிஇபி அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சிஇபியும் தனக்கு ஆலோசனை கூற பல குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளது.

ஒரு குழு 1எம்டிபி குறித்து விசாரித்து வருகிறது. இன்னொன்று அரசு அமைப்புகளில் சீரமைப்புகளைச் செய்வது குறித்து ஆராய்கிறது. அவற்றின் பரிந்துரைகள் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அமைச்சரவையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படலாம்.

100 நாள்கள் என்பது ஒரு குறுகிய காலம்தான். கால நீட்டிப்பு அவை கூடுதல் காலம் பிரதமருக்கு உதவுவதற்கு வாய்ப்பாக அமையும்.

எல்லாரும் பொறுமை காத்து அவர்களுக்குக் கூடுதல் அவகாசம் கொடுப்போமே.

பெயரிலி_1527925538: சிஇபி உறுப்பினர்களுக்கு ஒரு காசுகூட சம்பளம் கொடுக்கப்படுவதில்லை.. காசே வாங்காமல் நாட்டுக்காக சேவை செய்யும் அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

அவர்கள் தொடர்ந்து சேவை செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். முந்தைய அரசாங்கம் விட்டுச் சென்றுள்ள அலங்கோலத்தைச் சீர்படுத்த மகாதிருக்கு நிறைய உதவி தேவைப்படுகிறது.

நீதி: இறுதி முடிவெடுப்பது அமைச்சரவை என்கிறபோது சிஇபி ஓர் ஆலோசகக் குழுவாக செயல்படுவதில் தப்பில்லை.

மகாதிர், ஒரு வழிகாட்டியாக, ஒரு மேற்பார்வையாளராக இருந்து அமைச்சர்கள் அவர்கள் போக்கில் தொழிலைக் கற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டும். ஒரு நாள் மகாதிர் இருக்க மாட்டார். அப்போது அமைச்சர்கள் முடிவெடுப்பதில் திறமையானவர்களாக, பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.