நம்பத்தகுந்த எதிரணியாகுவதற்கு முன்னர் மசீச நஜிப்பை கண்டிக்க வேண்டும், கிட் சியாங் கூறுகிறார்

 

1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது கண்டனம் தெரிவிக்காவிட்டால் மசீச நம்பத்தகுந்த எதிரணியாகுவதில் தோல்வியுறும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார்.

பலாகோங் இடைத் தேர்தலில் டிஎபிக்கு எதிராகப் போட்டியிடும் மசீச சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையக் கொண்டிருக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கு கடிவாளமாகச் செயல்படும் என்று பரப்புரை செய்து வருகிறது.

இதற்கு எதிர்வினையாற்றிய கிட் சியாங், கடிவாளம் தேவைப்படுகிறது, ஆனால் அதற்கு மசீச தகுதி பெறவில்லை. ஏனென்றால் அது தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (13 ஆவது பொதுத் தேர்தலில்) அது நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்காக அது மன்னிப்பு கோர வேண்டும் என்றாரவர்.

இந்த 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்பை ஆதரித்த அவர்களின் நிலைப்பாடு தவறானது என்பதை ஒப்புக்கொண்டு நஜிப்புக்கும் 1எம்டிபிக்கும் எதிராக கண்டனம் தெரிவித்தாலன்றி, மசீச சீர்திருத்தமடைய முடியாது என்று இன்று டிஎபி வேட்பாளர் வோங் சியு கி-க்கு ஆதரவாக கம்போங் பாரு, பத்து 11, செராஸ் காலைச் சந்தையில் களமிறங்கிய கிட் சியாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, மசீச தலைவர் லியோ தியோங் சிலாங்கூர் சட்டமன்றத்தில் ஹரப்பானுக்கு கடிவாளமாகச் செயல்பட மசீச வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

டிஎபியின் சட்டமன்ற உறுப்பினர் எடி இங் ஒரு விபத்தில் மரணமுற்றதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் செப்டெம்பர் 8 இல் நடைபெறுகிறது. மசீச சார்பில் டான் சீ தியோங் போட்டியிடுகிறார்.

14 ஆவது பொதுத் தேர்தலில், சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் பாஸ் 6,230 வாக்குகளைப் பெற்ற வேளையில் மசீசவுக்கு 5.874 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியை டிஎபி 41, 768 வாக்குகள் பெற்று, 35, 538 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றது.