இசிஆர்எல் இரத்து: ஹரப்பான் -அல்லாத மாநிலங்களைத் தண்டிப்பதுதான் நோக்கமா? வீ கேட்கிறார்

மசீச துணைத் தலைவர் வீ கா சியோங், 14வது பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத கிழக்குக் கரை மாநிலங்களைத் “தண்டிக்கும்” நோக்கத்தில்தான் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிழக்குக் கரை இரயில் தொடர்பு (இசிஆர்எல்)த் திட்டத்தை இரத்துச் செய்ததா என்று வினவினார்.

இரகசியமாக வைக்கப்பட்டுள்ள அப்பெருத் திட்டத்துக்கான குத்தகை மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்திட்டத்துக்கான சில பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் யுடியுப் காணொளி ஒன்றைச் சுட்டிக்காட்டிய வீ , அக்காணொளியைக் காண்கையில் இசிஆர்எல் திட்டத்தை இரத்துச் செய்வது அவசியம்தானா என்ற கேள்வி எழுகிறது என்றார்.

“அத் திட்டத்தால் மிகவும் பயனடையும் மூன்று மாநிலங்களான கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகியவற்றைத் தண்டிக்கும் நோக்கத்தில்தான் அது இரத்துச் செய்யப்பட்டதோ என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். அவை மூன்றும் ஹரப்பான் அரசாங்கத்தைக் கொண்டிராத மாநிலங்கள்.

“மலேசியர்களுக்கு உண்மை விவரங்கள் தெரிய வேண்டும். அப்போதுதான் ஹரப்பான் கூறுவது சரியா, திட்டத்தை இரத்துச் செய்தது சரியான முடிவுதானா என்பதைக் கணிக்க முடியும்”, என வீ ஓர் அறிக்கையில் கூறினார்.