சிஎம்: சாபா எண்ணெய் வரியில் 40 விழுக்காடும் 20விழுக்காடு உரிமத் தொகையும் பெற உரிமை பெற்றிருக்கிறது

சாபா அம்மாநில எண்ணெய் உற்பத்தி வரிப்பணத்தில் 40 விழுக்காட்டையும் 20விழுக்காடு உரிமத் தொகையையும் பெறுவதற்கு உரிமை பெற்றிருக்கிறது என முதலமைச்சர் ஷாபி அப்டால் கூறினார்.

அது குறித்து அவர், விரைவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியையும் சந்தித்துப் பேசுவார் என த மலேசியன் இன்சைட் செய்தி வெளியிட்டுள்ளது.

“எண்ணெய் வரிப் பணத்தில் 40 விழுக்காடு கொடுக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும்.

“கூட்டரசு அரசாங்கம் சாபாவிலிருந்து நிறைய வரிகளையும் கட்டணங்களையும் வசூலித்து வந்துள்ளது. நாங்கள் குறை சொன்னதில்லை. எங்கள் வளத்தை மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எங்களுக்கு வருத்தமில்லை.

“ஆனால், எங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவதில் 40விழுக்காட்டைத் திருப்பிக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்”, என்று ஷாபி கூறியதாக அந்த இணையச் செய்தித்தளம் கூறிற்று.

மேலும், நாட்டின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட பாதி சாபாவில்தான் உற்பத்தியாகிறது என்கிறபோது அது 20 விழுக்காடு உரிமத் தொகை கேட்பதும் ஒரு “நியாயமான கோரிக்கையே” என்றவர் குறிப்பிட்டார்.