கெப்போங் எம்பி லிம் லிப் எங், யயாசான் விலாயா பேர்சக்குத்துவானின் நிலப் பரிவர்த்தனைகளை முடக்கி வைக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுநலம் பேணும் அறக்கட்டளை என்று நிறுவனப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அது, நில உரிமையாளர் ஆனது எப்படி என்றவர் வினவினார்.
அதன் வசமுள்ள நிலங்களில் குடியிருப்புக் கட்டிடங்களைக் கட்டலாம், கடைகள் கட்டலாம், அலுவலகங்கள் கட்டலாம், இவை எல்லாம் அடங்கிய கலவை மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளலாம்.
“யயாசான் விலாயா பேர்சக்குத்துவான் என்பது பொதுநலம் பேணும் அமைப்பு. நில மேம்பாட்டுப் பணிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
“அப்படியென்றால், அரசாங்கம் அந்த அறக்கட்டளைக்கு நிலங்களைக் கொடுத்தது தனியார் மேம்பாட்டாளர்களுக்கு அவற்றை விற்பதற்கு அல்லது கூட்டாக அந்நிலங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்குத்தான் என்றாகிறது”, என லிம் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன் தொடர்பில் மலேசியாகினி முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரைத் தொடர்புகொண்டு அவரது பதிலுக்குக் காத்திருக்கிறது.
தெங்கு அட்னான்தான் 2013-இலிருந்து மே பொதுத் தேர்தல்வரை கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்தார். அவர் இந்த அறக்கட்டளையின் இயக்குனர் வாரியத்திலும் இருந்துள்ளார், நிறுவனப் பதிவக ஆவணங்களின்படி அவர் இன்னும் ஓர் இயக்குனர்தான்.