சாபாவின் முன்னாள் முதலமைச்சர் உடல் நலம் தேறியதும் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வார்கள்.
மலாய் மெயிலிடம் பேசிய சாபா போலீஸ் ஆணையர் ரம்லி டின், மூசா அமானுக்குச் “சிறப்புச் சலுகை” கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
“அவர் இப்போதிருக்கும் நிலையில் அவருக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை- இது சிறப்புச் சலுகை ஆகாது.
“மனிதாபிமான அடிப்படையில் அவர் உடல் நலம் தேற அவகாசம் அளிக்கிறோம். அதன்பின்னர் அவரைச் சென்று காண்போம்”, என்றாரவர்.
மூசா அவரது உடல்நிலையை விவரித்து கடிதம் எழுதியிருப்பதாக ரம்லி தெரிவித்தார். ஊடகங்கள் அதையும் இதையும் எழுதி அந்த அரசியல்வாதியின் உடல்நிலை மோசமாக்கி விடக் கூடாது என்றவர் வலியுறுத்தினார்.
மூசா 14வது பொதுத் தேர்தலை அடுத்து சாபா ஆளுநர் ஜுஹார் மஹிருடினை மருட்டினார் என்று கூறப்படுவதை போலீசார் புலனாய்வு செய்து வருகிறார்கள்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வெளிநாடு சென்ற மூசா, லண்டனில் இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். இப்போது அவர் சுபாங் ஜெயா மருத்துவமனையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.