தமது தகப்பனார் கர்பால் சிங்-கின் தேசநிந்தனை மேல்முறையீட்டின் தீர்ப்பில் ஒரு மூத்த நீதிபதி தலையிட்டார் என்று கூறப்படுவது மீது கர்பாலின் மகள் சங்கீத் கவுர் டியோ ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார்.
கர்பாலின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க மேல்முறையீட்டை செவிமடுத்த நீதிபதிகளின் பெரும்பான்மை முடிவில் ஒரு பெயர் குறிப்படப்படாத நீதிபதி தலையிட்டார் என்று வழக்குரைஞர் முகமட் ஹனிப் காடிரி அப்துல்லா கூறிக்கொண்டார் என்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஒரு முகநூல் பதிவில், நீதிபதிகள் அவர்களின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஹனிப் குற்றம் சாட்டினார்.
இந்தத் தலையிடுதல் பற்றி தமக்கு சமீபத்தில்தான் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. இது விசாரிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு நீதிபரிபாலனத்தில் தலையிடுதல் இருப்பதாகக் கூறப்படுவதை விசாரிக்க வேண்டும்”, என்று சங்கீத் மலேசியாகினியிடம் கூறினார்.
பெப்ரவரி 6, 2009 ஆம் ஆண்டில், கோலாலம்பூரிலுள்ள அவரது சட்ட நிறுவனத்தில் கர்பால் சிங் பேராக் சுல்தானுக்கு எதிராக தேசநிந்தனைச் சொற்களைக் கூறினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முகமட் நிஸார் ஜமாலுடினை பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து அகற்றியது பற்றி சுல்தானிடம் நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படலாம் என்று கூறியதாக கர்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜூன் 11, 2010 இல், உயர்நீதிமன்றம் அவரை தற்காப்பு விவாதம் செய்ய அழைக்காமல், கர்பாலை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.
ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி 20, 2012 இல் உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி கர்பாலை எதிர்வாதம் செய்ய உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 21, 2014 இல், உயர்நீதிமன்றம் கர்பால் தேசநிந்தனைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 17, 2014 இல், கர்பால் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
மே 30, 2016 இல், மேல்முறையீட்டு நீதிமன்றம் கர்பால் குற்றவாளி என்ற தீர்ப்பை நிலைநிறுத்தியது. ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட ரிம4,000 அபராதத்தை ரிம1,800க்கு குறைத்தது.