அம்னோ ஆண்டுக்கூட்டம் இரண்டு நாள்களுக்கு மட்டுமே

வழக்கமாக ஐந்து நாள்கள் நீடிக்கும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இவ்வாண்டு இரண்டு நாள் விவகாரமாகியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அந்நிகழ்வு நவம்பர் பிற்பகுதியில் அல்லது டிசம்பர் முற்பகுதியில் ஒரு விழாபோன்று நடக்கும் . இவ்வாண்டில் செப்டம்பரில் அது நடக்கிறது.

அம்னோ இப்போது ஆளும்கட்சி அல்ல என்பதால் கூட்டம் பழைய கோலாகலமின்றி அடக்கமாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பகுதிகள் அவற்றின் கூட்டங்களை செப்டம்பர் 29லும் தலைமைக் கட்சியின் கூட்டம் செப்டம்பர் 30இலும் நடக்கும் என அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டங்கள் அம்னோவுக்குச் சொந்தமான புத்ரா உலக வணிக மையத்தில் நடக்கும்.

முந்தைய அம்னோ கூட்டங்களில் செய்திகள் சேகரிக்க மலேசியாகினிக்கும் வேறு சில இணையத் தளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை இன்னும் தொடர்கிறதா என்பது தெரியவில்லை.