மூத்த இதழாளர் உதயம் துரைராஜ் அமரரானார்

உலகில் முதன் முறையாக தொலைக்காட்சியில்  தமிழ்ச் செய்தி அறிக்கையை  வாசித்த ‘உதயம்’ துரைராஜ் அமரர் ஆகிவிட்டார். 1963-ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி ஒலிபரப்பைத் தொடங்கியபோது, அதைத் தொகுத்து வழங்கிய பெருமைக்குரிய எம்.துரைராஜ், மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் மிக மூத்தவராகவும் அனுபவம் மிக்கவராகவும் வலம் வந்தவர். அவர், ஆகஸ்ட் 24-ஆம் நாள் காலையில் முதுமையின் காரணமாக உயிர் துறந்தார்.

ஆதி குமணனனை உருவாக்கியவர்; பின்னர் அதே ஆதிகுமணனின் அரவணைப்பில் இதயம் இதழை மாதந்தோறும் வெளியிட்டு வந்தார். தமிழகம் சிவகங்கைச் சீமையில் தோன்றிய அவர், இளைஞர் பருவத்தை எட்டுமுன்பே, சிங்கையில் இருந்த தன் தந்தையுடன் இணைந்து, பின் இந்த மலையகத்தில் சங்கமம் ஆனார்.

மலேசிய தகவல் துறையில் சேர்ந்து பணியாற்றிய இவர், அரசின் சார்பில் உதயம் என்னும் இதழை 14 ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்டு வந்தார். அதன் பின்னர், மலேசிய பத்திரிகை உலகில் தன்னை முழுவதும் ஐக்கியப்படுத்திக் கொண்டு கடைசிவரை அப்படியே வாழ்ந்தார்.

கட்டுரை, அரசியல் ஆய்வுரை, சிறுகதை என்றெல்லாம் ஏராளமான இலக்கியப் படைப்புகளை வார்த்த இவரின் படைப்புகளில் ‘பாதைகளும் பயணங்களும்’ என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. அவரின் பட்டறிவைத் தொகுத்து அறுநூறு பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்த நூல், மலேசியாவைக் கடந்து தமிழக இலக்கிய வட்டத்திலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக லண்டன் தமிழ்ச் சங்கத்திலும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும்கூட வெளியிடப்பட்ட ‘பாதைகளும் பயணங்களும்’, ஆங்கிலத்திலும் மொழியெயர்க்கப்பட்டுள்ளது.

சின்ன வயதிலேயே எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டிய துரைராஜ், சிங்கப்பூரில் ‘புதுயுகம்’ என்னும் இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். மலேசியாவில் மலேசிய நண்பன், மக்கள் ஓசை நாளேடுகளில் துணை ஆசிரியராக இருந்ததுடன் தலையங்கம் எழுதியும் வந்தவர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தோற்றுநர்களில் ஒருவராகவும் அதன் தொடக்க காலத் தலைவராகவும் விளங்கிய துரைராஜ், பின்னாளில் அதே எழுத்தாளர் சங்கத்தால் ‘வெள்ளி விழா நாயகர்’ என்னும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உதயம் துரைராஜ் என்று பரவலாக அழைக்கப்பட்ட இவர், மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கினார். துன் சாமிவேலுவின் ஆரம்ப கால நண்பரான இவர், மேடையில் உரையாற்றுவதிலும் வல்லவர்.

இவரின் பேச்சு தகவல் களஞ்சியத்தைப் போல இருக்கும். ஆற்றொழுக்காகப் பேசி கேட்போரைக் கவரும் ஆற்றல் மிக்க இவர், 84-ஆவது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மறைந்தார்.

அன்னாரின் பிரிவால் துயறும் அனைவருக்கும் மலேசியாஇன்று குடும்பத்தினர் தங்களின்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.  

இவருக்கான இறுதி மரியாதை ஆகஸ்ட் 26, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்ல முகவரி: 25 Jalan Udang Gantung 1, Taman Cuepacs, Segambut, 52000 Kuala Lumpur.