அன்வார் பிகேஆரின் பெயரை ஓர் இந்தியக் கட்சிப் பெயராக மாற்ற வேண்டும், விக்னேஸ்வரன் கூறுகிறார்

 

பிகேஆரின் உறுப்பினர் நிலையைப் பிரதிநிதிக்கும் வகையில் அக்கட்சி அதன் பெயரை ஓர் இந்தியக் கட்சி என்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தலைவர் எஸ்.எ விக்னேஸ்வரன் கூறுகிறார்.

மஇகாவைவிட பிகேஆரில் அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

அவர் சொன்னது சரி. ஏராளமான இந்தியர்கள் பிகேஆரில் இருக்கிறார்கள். அதைத்தான் நானும் கேள்விப்பட்டேன். அவர் பிகேஆரின் பெயரை ஓர் இந்தியக் கட்சியின் பெயருக்கு மாற்றிவிட அவருக்கு நான் ஆலோசனை கூறுகிறேன் என்றாரவர்.

பிகேஆரில் அதிகமான இந்தியர்கள் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அவர் அக்கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஓர் இந்தியருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் ஏளனமாகக் கூறினார்.

முன்னதாக, மஇகாவை “மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடம்” என்று அன்வார் வர்ணித்திருந்ததாக அவரை மேற்கோள் காட்டி தமிழ் மலர் செய்தி வெளியிட்டிருந்தது.

அன்வாரின் கூற்றுப்படி, அதிகாரப்பூரிவமாக பிகேஆரில் 1946 இல் அமைக்கப்பட்ட அந்த பிஎன் பங்காளித்துவக் கட்சியைவிட அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் கட்சியின் தலைமையகத்தில் பேராக் பிகேஆர் இந்தியத் தலைவர்களைச் சந்தித்தப் பின்னர் அன்வார் இதனைக் கூறினார்.