இராஜகுமாரன் காலமானார் – பத்திரிக்கைத் துறை இன்னொரு மகனை இழந்தது!

மலேசிய பத்திரிகைத் துறையைச் சேர்ந்த இன்னொரு தூண் இன்று சரிந்தது. நயனம் பருவ இதழை நீண்ட காலம் நடத்தி வந்தவரும் ‘இளைய தமிழவேள்’ ஆதி.குமணனின் அண்ணனுமான ஆதி.இராஜகுமாரன் உடல் நலக் குறைவினால் இன்று ஆகஸ்ட் 25-ஆம் நாள் சனிக்கிழமை காலையில் தலைநகரில் காலமானார்.

நயனம் மாத இதழை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் மாதந்தோறும் காத்திருந்த வரலாற்றை உருவாக்கி, அந்த நிலையை நீண்ட காலம் தற்காத்து வந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் இராஜ குமாரன். அந்த இதழில் பணியாற்றியவர்கள், “நான் நயனத்தில் பணி புரிகிறேன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்ட காலமும் இருந்தது.

காலவோட்டத்தில் அத்தகைய வசந்த காலம் மாறிப்போனது. பெரும்பாலும்  தமிழகத்து அரசியல், கலை, இசை, சமூகவியல் தொடர்பான செய்திகளை சுடச்சுட மலேசிய வாசகர்களுக்கு அளித்து வந்த நயன இதழை,  பத்திரிக்கைத் துறையில் இணையச் சேவை பரவலாக நுழைந்த பின்பும் அதனைப் பல சிக்கல்களுக்கிடையே தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார்.

சமூக சிந்தனை மிக்க இராஜகுமாரன், ஏடுகள் எதுவாக இருந்தாலும் அவற்றில் சாதி தொடர்பான தாக்கமோ அடையாளமோ இடம்பெறக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். குறிப்பாக, சாதி சங்கங்கள் குறித்த செய்திகளை நாளேடுகள் வெளியிடக்கூடாதென்றும் இறப்பு விளம்பரங்களில் இறந்தவரின் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்றும் முயன்றவர்.

மக்கள் ஓசை நாளேட்டின் பங்குதாரருமான ஆதி. இராஜகுமாரன்,  தன் அன்புத் தம்பி ஆதி குமணனின் வானம்பாடியில் ஆழமான சிந்தனைகளைக் கொண்ட பல படைப்புகளைப் பதிவு செய்தவர். தரமான பத்திரிக்கை நிருபர் என்பதற்கான இலக்கணம் வகுந்தவர்களில் இவரும் ஒருவர்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு மலேசியாஇன்று-வின் ஆழ்ந்த இரங்கல்.

ஆதி.இராஜகுமாரனின் வீட்டு முகவரி:
3, Jalan Kolam Air 7, Taman Golden, Off Jalan Ipoh, 51200-Kuala Lumpur.